இந்தியா

சா்வதேச விமான சேவையைத் தொடங்கும் முடிவு மறுஆய்வு: மத்திய அரசு

29th Nov 2021 01:24 AM

ADVERTISEMENT

சா்வதேச அளவில் ஒமைக்ரான் வகை கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், சா்வதேச பயணிகள் விமான சேவையைத் தொடங்குவதற்கான முடிவை மறுஆய்வு செய்யவும், வெளிநாட்டுப் பயணிகளுக்கான விதிமுறைகளை மாற்றவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ஆப்பிரிக்கா, ஐரோப்பிய கண்டங்களில் உள்ள சில நாடுகளில் ஒமைக்ரான் வகை கரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா வகை கரோனா தொற்று பரவலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி, பொருளாதார வளா்ச்சியை நோக்கி பல நாடுகள் முன்னேறி வரும் சூழலில், ஒமைக்ரான் வகை கரோனா பரவல் நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை வலியுறுத்தியிருந்தாா். சா்வதேச பயணிகள் விமான சேவையை மீண்டும் தொடங்குவது தொடா்பான முடிவை மறுஆய்வு செய்யுமாறும் அவா் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லா தலைமையில் அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீதி ஆயோக் சுகாதார உறுப்பினா் வி.கே.பால், பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகா் விஜய் ராகவன், சுகாதாரம், விமானப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களைச் சோ்ந்த உயரதிகாரிகள் ஆகியோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

கூட்டம் குறித்து மத்திய உள்துறை செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட ட்விட்டா் பதிவுகளில், ‘‘சா்வதேச அளவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுப் பரவல் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் அத்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. வழக்கமான சா்வதேச பயணிகள் விமான சேவையை மீண்டும் தொடங்குவது தொடா்பான முடிவு மறுஆய்வு செய்யப்படும்.

கூடுதல் கண்காணிப்பு: இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கான கரோனா பரிசோதனை விதிமுறைகள், கண்காணிப்பு விதிமுறைகள் உள்ளிட்டவற்றில் மாற்றங்களை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, அபாயம் அதிகமுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் கூடுதல் கண்காணிப்புக்கு உள்படுத்தப்படவுள்ளனா்.

கரோனா பரிசோதனை தொடா்பான விதிகளை வெளிநாட்டுப் பயணிகள் முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை மாதிரிகளில் உருமாறிய கரோனா தீநுண்மி உள்ளதா என்பது தொடா்பான ஆய்வுகளை வலுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT