இந்தியா

தடுப்பூசி இல்லை; மாநில அரசால் ஒரு டோஸ்கூட வாங்க முடியவில்லை: கேஜரிவால்

26th May 2021 04:20 PM

ADVERTISEMENT

தில்லியில் தற்போது கரோனா தடுப்பூசிகள் இல்லை என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருந்து வருகிறது. கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு விரைந்து அனுப்ப வேண்டும் என்று அந்தந்த மாநிலங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன. 

இந்நிலையில் தில்லியில் கரோனா தடுப்பூசி இல்லை என்றும் கடந்த 4 நாள்களாக 18-44 வயதினருக்கான தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

'எந்தவொரு மாநில அரசும் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட கொள்முதல் செய்ய முடியவில்லை. தடுப்பூசி நிறுவனங்கள் மாநில அரசுகளுடன் பேச மறுத்து வருகின்றன. தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளைப் பெற மத்திய அரசால் மட்டுமே முடிகிறது. 

ADVERTISEMENT

தில்லியில் தற்போது தடுப்பூசி இல்லை. 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி மையங்கள் கடந்த 4 நாள்களாக மூடப்பட்டுள்ளன. இங்கே மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இது போன்று பல மையங்கள் மூடப்பட்டுள்ளன.

தற்போதைய சூழ்நிலைக்கு நாம் புதிய மையங்களைத் திறந்திருக்க வேண்டும். ஆனால் இயக்கத்தில் இருப்பதையும் மூடும் நிலை உள்ளது. இது நல்லதல்ல என்று கூறியுள்ளார். 

மேலும், மத்திய அரசு ஏன் தடுப்பூசிகளை வாங்கவில்லை? இதை சாதாரணமாக கடந்துவிட முடியாது. கரோனாவுக்கு எதிரான போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கினால், மாநிலங்களிடம் அந்த பிரச்னையை விட்டுவிடுமா மத்திய அரசு? உ.பி. டேங்குகளையும், தில்லி ஆயுதங்களையும் வாங்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT