இந்தியா

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

DIN


புது தில்லி: நாட்டில் கரோனா தொற்று பாதிப்பின் 2-ஆவது அலை தீவிரமாக இருக்கும் நிலையில், அதற்குத் தீர்வு காணும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி 12 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டாக பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளனர். இதில் பல மாநில முதல்வர்களும் அடங்குவர்.

குடிமக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்துவது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் திட்டத்தை நிறுத்திவிட்டு, அந்த நிதியை கரோனா தடுப்புப் பணிகளுக்கு செலவிடுவது உள்ளிட்ட பல ஆலோசனைகளை அந்தக் கடிதத்தில் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

நாட்டில் கரோனா சூழல் தீவிரமாக இருக்கும் நிலையில், பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் அனுப்பியுள்ள இந்தக் கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் ஹெச்.டி.தேவெ கெளடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (திமுக), மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே (சிவசேனை), மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) ஆகியோரும் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அத்துடன் ஃபரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி), அகிலேஷ் யாதவ் (சமாஜவாதி கட்சி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரீய ஜனதா தளம்), டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோரும் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மனித இனத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் நாட்டில் கரோனா பாதிப்பு உருமாறியுள்ளது. இந்தச் சூழலில் கரோனாவை கட்டுப்படுத்த வழங்கப்படும் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த வேண்டியது மிக முக்கியமாகும். இதற்கு முன்பும் கூட்டாகவோ, தனித்தனியாகவோ இந்த விவகாரத்தை உங்களது (பிரதமர் மோடி) கவனத்துக்கு கொண்டுவர முயற்சித்துள்ளோம். துரதிருஷ்டவசமாக அவ்வாறு இதுவரை வழங்கப்பட்ட பரிந்துரைகளை உங்களது அரசு புறக்கணித்துவிட்டது. அதன் காரணமாகவே நாட்டில் கரோனா சூழல் இத்தகைய மோசமான நிலைக்கு வந்துள்ளது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தற்போது நாங்கள் வழங்கும் ஆலோசனைகளில் சிலவற்றை போர்க்கால அடிப்படையில் அமல்படுத்த வேண்டும்.

உள்நாடு, வெளிநாடு என வாய்ப்பிருக்கும் அனைத்து இடங்களில் இருந்தும் கரோனா தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்; உடனடியாக, இலவசமாக நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்க வேண்டும். 

நாடாளுமன்ற கட்டடப் பணி வேண்டாம்: உள்நாட்டில் கரோனா தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்கும் வகையில் மருத்துவ நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும்; தடுப்பூசி திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.35,000 கோடியை உரிய வகையில் செலவிட வேண்டும்; புதிதாக நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் திட்டத்தை நிறுத்திவிட்டு, அந்த நிதியை தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் கொள்முதலுக்கு பயன்படுத்தலாம்.

"பிஎம் கேர்ஸ்' நிதி, தனியார் அறக்கட்டளை நிதி ஆகியவற்றில் இருக்கும் முழு நிதியையும் தடுப்பூசி, ஆக்சிஜன் கொள்முதலுக்கு பயன்படுத்த வேண்டும்; வேலையில்லாதோருக்கு மாதம் ரூ.6,000 நிதியுதவி அளிக்க வேண்டும்; மத்திய கிடங்குகளில் 1 கோடி டன்னுக்கும் அதிகமாக வீணாக இருந்துவரும் உணவு தானியங்களை தேவையிருப்போருக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

கரோனா சூழலில் விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில், சமீபத்தில் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இதில் எதையும் இதுவரை பிரதமர் அலுவலகமோ, மத்திய அரசோ செய்திருக்காவிட்டாலும், நாட்டு மக்களின் மீதான அக்கறையின்பேரில் நாங்கள் வழங்கிய இந்த ஆலோசனைகளை அமல்படுத்தினால் அது மெச்சத்தக்கதாக இருக்கும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2-ஆவது அலை உச்சம்: இந்தியாவில் கரோனா 2-ஆவது அலை உச்சத்தை எட்டியிருக்கிறது. மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை, சிகிச்சைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு எழுந்த வண்ணம் உள்ளது.

சிகிச்சை பலனின்றி ஏற்படும் உயிரிழப்புகள் தவிர்த்து, படுக்கை வசதி, உரிய சிகிச்சை, ஆக்சிஜன், போதிய மருந்து போன்றவை கிடைக்காத காரணத்தால் கரோனா நோயாளிகள் பலர் அன்றாடம் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. முதல் தவணை செலுத்திக் கொண்டோருக்கே 2-ஆவது தவணைக்கான தடுப்பூசி கிடைக்காத நிலை காணப்படுகிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளன. சில மாநிலங்கள் அதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்ட சூழலில் பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT