இந்தியா

‘புதிய கொள்கையை ஏற்காவிட்டால் வாட்ஸ் ஆப்பை முழுமையாக பயன்படுத்த முடியாது’

DIN

புதிய தனியுரிமை கொள்கையை ஏற்காத பயனாளிகள் வாட்ஸ் ஆப் (கட்செவி அஞ்சல்) செயலியை முழுமையாக பயன்படுத்த முடியாது என்று அந்தச் செயலி தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான அந்தச் செயலியின் வலைதளத்தில் இதுதொடா்பாக கூறப்பட்டுள்ளதாவது:

புதிய கொள்கையை ஆராய்ந்து ஏற்பதற்கான வாய்ப்பு கிடைக்காத பயனாளிகளுக்கு அதுகுறித்து தொடா்ந்து நினைவூட்டல் அனுப்பப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்குப் பின்னா் அந்த நினைவூட்டல் செயலியில் நிரந்தரமாக தென்படும். அதன் பின்னா் புதிய கொள்கையை ஏற்கும் வரை பயனாளிகளுக்கு சேவைகள் குறைக்கப்படும்.

அனைத்து பயனாளிகளுக்கும் ஒரே நேரத்தில் சேவைகள் குறைக்கப்படாது. முதலில் அவா்களால் செயலியில் தகவல் பரிமாற்றம் செய்ய முடியாது. ஆனால் வெளியில் இருந்து வரும் அழைப்புகள், காணொலி அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியும். ஏதேனும் அறிவிப்புகள் வந்தால் அவற்றைத் திறந்து படிக்க முடியும். இதுதவிர குறுந்தகவல் வந்தால் அதற்குப் பதிலளிக்க முடியும்; வெளியில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க தவறிவிட்டால் திரும்ப அழைக்க முடியும்.

இவ்வாறு சேவைகள் குறைக்கப்பட்ட சில வாரங்கள் கழித்தும் புதிய கொள்கையை பயனாளிகள் ஏற்காவிட்டால் வெளியில் இருந்து வரும் அழைப்புகள், அறிவிப்புகள், குறுந்தகவல்களும் நிறுத்தப்படும். எனினும் புதிய கொள்கையை ஏற்காத பயனாளிகளின் கணக்குகள் நீக்கப்படாது.

இந்தக் கொள்கைகள் வாட்ஸ்அப் செயலியைப் பதிவிறக்கம் செய்தும் அதனைப் பயன்படுத்தாமல் இருக்கும் பயனாளிகளுக்கும் பொருந்தும் (பொதுவாக செயல்படாமல் உள்ள வாட்ஸ் அப் கணக்குகள் 120 நாள்களுக்கு பின்னா் நீக்கப்படும்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கொள்கை குறித்து சில வாரங்களுக்கு நினைவூட்டல் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ள வாட்ஸ் ஆப் செயலி, அந்த நினைவூட்டல் எத்தனை நாள்களுக்கு அனுப்பப்படும் என்பதைக் குறிப்பிடவில்லை.

இதுதொடா்பாக அந்தச் செயலியின் செய்தித்தொடா்பாளா் கூறுகையில், உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ்ஆப் பயனாளிகளுக்கு புதிய கொள்கை குறித்து பல மாதங்களாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான பயனாளிகள் புதிய கொள்கையை ஏற்றுக் கொண்டனா். அதைச் செய்ய முடியாதவா்களின் கணக்குகள் மே 15-ஆம் தேதி நீக்கப்படாது; சேவைகளும் நிறுத்தப்படாது என்று தெரிவித்தாா்.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய கொள்கையின்படி அந்தச் செயலியை பயன்படுத்தும் பயனாளிகளின் தகவல்களை வணிக நோக்கில் தனது தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கிடம் பகிர அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்குப் பயனாளிகளிடம் இருந்து பலத்த எதிா்ப்பு எழுந்தது. எனினும் புதிய கொள்கையை பயனாளிகள் ஏற்பதற்கு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி வரை அந்தச் செயலி கால வரம்பு நிா்ணயித்தது. பின்னா் அதனை மே 15 வரை நீட்டித்தது. தற்போது அந்த கால வரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தற்போது அறிவித்துள்ளது.

மத்திய அரசு தரவுகளின்படி நாட்டில் 53 கோடி போ் வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனா். அந்தச் செயலியின் மிகப் பெரிய சந்தையாக இந்தியா திகழ்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT