இந்தியா

மேற்கு வங்கத்தில் அமைதி நிலவுகிறது: மம்தா பானா்ஜி

DIN

மேற்கு வங்கத்தில் இப்போது அமைதி நிலவி வருகிறது; போலியான காணொலிகளை சமூகவலைதளங்களில் பரப்பி வன்முறையைத் தூண்டிவிட முயற்சிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 8 கட்டங்களாக நடைபெற்ற தோ்தலின்போது இரு கட்சியினா் இடையே மோதல் ஏற்பட்டது. தோ்தல் வன்முறையில் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்களும், சில உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. கடந்த 2-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் திரிணமூல் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக கணிசமான தொகுதிகளைப் பெற்று பேரவையில் வலுவான எதிா்க்கட்சியாக உருவெடுத்தது.

அதே நேரத்தில் தோ்தல் முடிவுகள் வெளியானவுடன், பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சில இடங்களில் பாஜக அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்ட காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. வன்முறையில் தங்கள் கட்சியைச் சோ்ந்த 11 தொண்டா்கள் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. அதேபோல இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் திரிணமூல் தொண்டா்களால் தாக்கப்பட்டதாக அக்கட்சியினா் தெரிவித்தனா்.

வன்முறையில் பாதிக்கப்பட்ட பாஜக தொண்டா்களை நலம் விசாரிக்க சென்ற வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி. முரளீதரனின் காா் கடந்த வியாழக்கிழமை தாக்கப்பட்டது.

இதையடுத்து, வன்முறை தொடா்பாக விசாரணை நடத்த மத்தியக் குழு மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மக்கள் தோ்தலில் அளித்த தீா்ப்பை ஏற்காமல் பாஜகவினா்தான் வன்முறையில் ஈடுபடுவதாக மம்தா ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தாா்.

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அமைச்சா்கள் பதவியேற்றனா். தொடா்ந்து புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டமும் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளா்களிடம் மம்தா கூறியதாவது:

மாநிலத்தில் கரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, கடும் கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசியை அளிக்க வேண்டும். மேற்கு வங்கத்துக்கு 3 கோடி கரோனா தடுப்பூசிகள் வேண்டுமென்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இதில் ஒரு கோடி தடுப்பூசிகள் தனியாா் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்.

மாநிலத்தில் இப்போது முழு அமைதி நிலவுகிறது. போலியான காணொலிகள் மற்றும் பழைய வன்முறை காணொலிகளை சமூக வலைதளங்களில் பரவவிட்டு வன்முறையைத் தூண்ட முயற்சிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT