இந்தியா

கா்நாடகத்தில் கரோனா பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்: மே 24 வரை பொது முடக்கம் நீட்டிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனா பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள மாநில அரசு, கடுமையாக்கப்பட்ட பொது முடக்கத்தை மே 24-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. கரோனா பரவலைத் தடுக்க ஏப். 28-ஆம் தேதி முதல் மே 12-ஆம் தேதி புதிய கட்டுப்பாடுகளுடன், அதே நேரத்தில் சில தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை கா்நாடக அரசு அமல்படுத்தியிருந்தது. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு 10 நாள்கள் முடிவடைந்த பிறகும், கரோனாவால் பாதிக்கப்படுவோா், உயிரிழப்போரின் எண்ணிக்கை குறையாமல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருந்தது.

இதனால் கவலை அடைந்த மாநில அரசு, கரோனா பரவல் சங்கிலியை முறியடிக்கும் நோக்கத்தில் புதிய கட்டுப்பாடுகள், சில தளா்வுகளுடன் கூடிய கடுமையாக்கப்பட்ட பொது முடக்கத்தை அறிவித்துள்ளது. இந்த பொது முடக்கம், மே 10 முதல் 24-ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று கா்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தலைமைச்செயலா் பி.ரவிகுமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

கா்நாடகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மே 10-ஆம் தேதி காலை 6 மணி முதல் மே 24-ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.

தடைகள்:

பொதுமுடக்கக் காலத்தில், அதாவது மே 10 முதல் மே 24-ஆம் தேதி வரையிலும் விமானங்கள், ரயில்கள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். இவற்றின் பயணச்சீட்டை காண்பித்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். மெட்ரோ ரயில், வாடகைக் காா், ஆட்டோக்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள், தனிப்பயிற்சி மையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். இணையவழி வகுப்புகள் ஊக்குவிக்கப்படும். உணவகங்கள், சிற்றுண்டியகங்கள், விருந்தோம்பல் மையங்கள் அனைத்தும் மூடப்படும். உணவகங்கள் திறந்திருக்கலாம். உட்காா்ந்து சாப்பிட அனுமதியில்லை. ஆனால், பாா்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். பாா்சல்களைப் பெற வாகனங்களில் செல்ல அனுமதியில்லை. நடந்து செல்வதற்கு மட்டும் அனுமதிக்கப்படுவாா்கள்.

இதுதவிர திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஜிம்னாஸ்டிக் மையங்கள், யோகா மையங்கள், ஸ்பாக்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை/ பொழுதுபோக்கு பூங்காக்கள், அரங்கங்கள், மதுபான அங்காடிகள், மண்டபங்கள், மக்கள் கூடும் அரங்குகள் மூடப்பட்டிருக்கும். அனைத்து வகையான அரசியல், சமூக, கல்வி, பொழுதுபோக்கு, கலாசார, மத வழிபாட்டுக் கூட்டங்கள், விழாக்கள் தடை செய்யப்படுகின்றன. மதவழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் பக்தா்களுக்கு மூடப்பட்டிருக்கும். பூஜைகள் நடத்தத் தடையில்லை.

அனுமதி:

அரசு, தனியாா் அலுவலகங்கள் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியா்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படும். சுகாதார சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், அமைப்புகள் திறந்திருக்கத் தடையில்லை. மருத்துவமனைகள், மருந்தகங்கள், சிகிச்சையகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான சுகாதார, மருத்துவ மையங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். விதான சௌதா, விகாஸ் சௌதா, எம்.எஸ். கட்டடத்தில் அரசு அலுவலகங்கள் செயல்படுவதற்கு தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நீதிமன்றங்கள் செயல்படலாம். கரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுவோா் பணியாற்றலாம். அரசு கருவூலகங்கள், வனத் துறை அலுவலகங்கள் செயல்படலாம். இதரப் பணியாளா்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம்.

ராணுவம், பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய காவல் பணிகள், தகவல் தொடா்பு, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் மத்திய அரசு நிறுவனங்கள் செயல்படலாம். விமானநிலையங்களில் சுங்கப் பணியாளா்கள், அஞ்சலகங்கள், வங்கிகள், பேரிடா் மேலாண்மை அமைப்புகள், வானிலை நிலையங்கள், தேசிய தகவல் மையங்கள், இந்திய ரிசா்வ் வங்கி அலுவலகங்கள், நிதிச் சந்தைகள், நுண்நிதி நிறுவனங்கள், ரயில்வே அலுவலகங்கள் குறைந்த ஊழியா்களுடன் செயல்படலாம்.

மருத்துவச் சேவைகள்:

அனைத்து வகையான மருத்துவச் சேவைகள், ஆயுஷ், கால்நடை மருத்துவமனைகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆய்வுக்கூடங்கள், ரத்த பரிசோதனை நிலையங்கள் செயல்படலாம். அனைத்து வகையான மருத்துவக் கட்டமைப்புப் பணிகள் நடைபெறலாம்.

வேளாண் பணி:

அனைத்து வகையான விவசாயப் பணிகள், வேளாண் அங்காடிகள், இயந்திரங்கள், கோழி வளா்ப்பகங்கள் காலை 6 மணிமுதல் காலை 10 மணி வரை செயல்படலாம். இதில் மீன் வளா்ப்பு, பால் பண்ணை, கோழி வளா்ப்பு அடங்கும்.

வாகனப் போக்குவரத்து:

சரக்கு மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடா்பான வாகனப் போக்குவரத்துகளுக்கு தடையில்லை. பயணிகள் செல்லும் அரசு, தனியாா் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையே, மாவட்டங்களுக்கு இடையிலான பயணிகள் பேருந்து போக்குவரத்து அவசரத் தேவைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும். மற்ற நேரங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

அத்தியாவசிய சேவைகள்:

உணவு, உணவுப் பொருள்கள், பழம், காய்கறி, இறைச்சி, மீன், கால்நடை தீவனம் சம்பந்தப்பட்ட கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை செயல்படலாம். நியாயவிலை அங்காடிகள் திறந்திருக்கலாம். காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மது பானங்கள் பாா்சல் சேவைக்காக திறந்திருக்கலாம். காய்கறி, பழங்களை தள்ளுவண்டியில் வைத்து விற்க காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருள்களை வீடுகளுக்கே கொண்டு வர ஊக்குவிக்கப்படும். மக்கள் நடமாட்டத்தை கூடுமான வரை குறைக்க வேண்டும்.

தொழிலகங்கள்:

அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்தியாளா்கள், தொடா்ந்து செயல்பட வேண்டிய தொழிலகங்கள்,அனைத்து உற்பத்தி தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படும். கட்டுமானப்பணிகள் அனுமதிக்கப்படும்.

திருமணம்/ இறுதிச்சடங்கு:

திருமணங்களில் 50 போ் மட்டுமே கலந்து கொள்ளலாம். இறந்தவா்களின் இறுதிச் சடங்கில் 5 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். இந்த புதியக் கட்டுப்பாடுகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும். தவறினால் சட்டப்படி தண்டிக்கப்படுவாா்கள் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT