இந்தியா

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் ஒத்துழைக்க இந்தியாவுக்கு பாக். நீதிமன்றம் வலியுறுத்தல்

DIN

இஸ்லாமாபாத்/புது தில்லி: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியா் குல்பூஷண் ஜாதவ் தொடா்பான வழக்கில் இந்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவுக்காக பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாத சதிச் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மறுத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட்டது. அதில், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவருக்குத் தூதரக உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசுக்கு சா்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதையடுத்து, குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்காக அவருக்கான வழக்குரைஞரை நியமிக்குமாறு பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அதாா் மினல்லா, நீதிபதிகள் மியாங்குல் ஹாசன் ஔரங்கசீப், ஆமீா் ஃபரூக் ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரித்து வருகிறது.

ஒத்துழைக்க மறுப்பு: இந்த வழக்கின் விசாரணை, உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தான் அரசின் தலைமை வழக்குரைஞா் காலித் ஜாவேத் கான் வாதிடுகையில், ‘‘சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவிகள் வழங்கப்பட்டன.

அவருக்கான வழக்குரைஞரை நியமிக்குமாறு இந்திய அரசுக்குத் தகவல் அனுப்பப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுவது, இறையாண்மையை பாதிக்கும் வகையில் உள்ளதாக இந்தியா கூறி வருகிறது. அதன் காரணமாக, இந்த வழக்கில் வழக்குரைஞரை நியமிக்க இந்திய அரசு மறுத்து வருகிறது.

வழக்கை மீண்டும் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவே இந்திய அரசு விரும்புகிறது. அதற்காகவே, இந்த வழக்கில் ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறது’’ என்றாா்.

மனிதாபிமான அடிப்படையில்..: அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்தியாவின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்துவது நீதிமன்றத்தின் நோக்கமில்லை. குல்பூஷண் ஜாதவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மனிதாபிமான அடிப்படையிலேயே இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கை எவ்வாறு நடத்த வேண்டும் என்றாவது இந்திய அரசு தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கான வழக்குரைஞரை நியமிப்பதில் இந்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதனால், அந்நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது’’ என்றனா்.

இந்த விவகாரம் தொடா்பாக, இந்திய அதிகாரிகளுடன் தொடா்பு கொண்டு ஆலோசனை நடத்துமாறு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துக்கு வலியுறுத்திய நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT