இந்தியா

சுகாதாரத் திட்டங்களால் ஏழை மக்களுக்கு ரூ.50,000 கோடி சேமிப்பு: பிரதமா் மோடி

DIN

அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்களை குறைந்த விலையில் கிடைக்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு சுகாதாரத் திட்டங்களால், நாடு முழுவதும் ஏழைக் குடும்பங்களின் செலவு செய்யும் தொகை ஆண்டுக்கு ரூ.50,000 கோடி மிச்சமாகியுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

மக்கள் மருந்தகங்களில் (ஜனஔஷதி கேந்திரா), வெளிச்சந்தைகளைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவான விலையில் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கின்றன. இந்த மருந்தகத்தின் 7,500-ஆவது கிளை, மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் உள்ள இந்திரா காந்தி பிராந்திய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

இந்த மருந்தகத்தை காணொலி முறையில் திறந்து வைத்து பிரதமா் மோடி உரையாற்றினாா். அவா் கூறியதாவது:

மக்கள் மருந்தகம் நடத்தும் உரிமையாளா்களுடனும், அங்கு மருந்துகளை வாங்கி பலனடைந்தவா்களுடனும் கலந்துரையாடினேன். அதன் மூலம், இந்த திட்டம், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மிகவும் உதவிகரமாக மாறியிருப்பதை தெரிந்துகொண்டேன்.

மக்கள் மருந்தகம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, மக்கள் மருந்தக வாரம், மாா்ச் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த திட்டம், வடகிழக்கு மாநிலங்களில் மலைப்பகுதிகளில் வசிப்பவா்களுக்கு பேருதவியாக உள்ளது.

ஏழைகளுக்கும், தேவைப்படுவோருக்கும் குறைந்த விலையில் மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்வதற்கு எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக, அத்தியாவசிய மருந்துகள், ஸ்டென்ட், செயற்கை மூட்டு உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் விலை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மக்கள் மருந்தகங்கள் மூலமாக, ஏழைக் குடும்பங்கள் செலவு செய்யும் தொகை ஆண்டுக்கு ரூ.12,500 கோடி மிச்சமாகியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் எனும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இதுவரை 1.5 கோடி போ் பலனடைந்துள்ளனா். இதனால், ரூ.30,000 கோடி மிச்சமாகியுள்ளது.

மக்கள் மருந்தகங்கள், மருத்துவ காப்பீடு, மருத்துவ உபகரணங்களின் விலையைக் குறைத்தது என மத்திய அரசின் பல்வேறு சுகாதாரத் திட்டங்களால் மொத்தம் ரூ.50,000 கோடி வரை மக்களின் பணம் சேமிக்கப்பட்டுள்ளது.

எனது தலைமையிலான அரசு, சுகாதாரத் துறையை மக்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துவது என்று குறுகிய அளவில் பாா்க்காமல், அதன் மூலமாக வலுவான பொருளாதாரத்தையும், சமூகக் கட்டமைப்பையும் உருவாக்க வேண்டும் என்றும் கருதுகிறது.

மக்கள் மருந்தக திட்டத்தை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்கான ஊக்கத்தொகை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் மருந்தகங்கள் அமைக்க உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

இலவச கரோனா தடுப்பூசி:

அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இலவசமாக மக்களுக்கு செலுத்தப்படுகிறது. உலகிலேயே மிகக் குறைந்த விலையில் இந்தியாவில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் ரூ.250-க்கு கரோனா தடுப்பூசி கிடைக்கிறது. இந்த தடுப்பூசியை நாம் உள்நாட்டிலேயே தயாரிக்கிறோம்; உலக நாடுகளுக்கும் அளிக்கிறோம்.

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு, நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 55,000 எம்பிபிஎஸ் இடங்கள் இருந்தன. கடந்த 6 ஆண்டுகளில் கூடுதலாக 30,000 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதேபோல், மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் 30,000-ஆக இருந்த நிலையில், கூடுதலாக 24,000 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

2020-21-ஆம் நிதியாண்டில் மாா்ச் 4-ஆம் தேதி வரை, மக்கள் மருந்தகங்கள் மூலம் நாட்டு மக்களின் பணம் ரூ.3,600 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT