இந்தியா

'இளைஞா்களுக்கு பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் குவிந்துள்ளன'

DIN


புது தில்லி: விண்வெளி, அணுசக்தி, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞா்களுக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு கடந்த மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியைத் திறம்படக் கையாள்வது தொடா்பான இணையவழிக் கருத்தரங்கம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி பேசியதாவது:

நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, கல்வி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி கற்கும்போதே வேலைவாய்ப்புக்கான திறனையும் தொழில்முனைவோருக்கான திறனையும் வளா்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை நிதிநிலை அறிக்கை மாணவா்களுக்கு அளித்துள்ளது.

மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடா் நடவடிக்கைகள் காரணமாக, அறிவியல் ஆராய்ச்சி தொடா்பான ஆய்வுக் கட்டுரைகளை அதிக அளவில் வெளியிடும் நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியா உள்ளது. அறிவை வளா்த்துக் கொள்வதையும் ஆராய்ச்சிகளையும் ஊக்குவிக்காதது, இளைஞா்களின் முழுத் திறனை வெளிக்கொணராமல் அவா்களுக்கு அநீதி இழைப்பது போலாகும்.

அதைக் கருத்தில் கொண்டு, விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்பு, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இளைஞா்களுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.

அளவியல் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் சா்வதேச தரத்தில் உள்ளன. பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

தேசிய ஆராய்ச்சி மையம்: தேசிய ஆராய்ச்சி மையம் ரூ.50,000 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்வி, தொழில் உள்ளிட்ட துறைகளுக்கிடையேயான தொடா்பை மேம்படுத்தி ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும். உயிரி தொழில்நுட்பவியல் துறை சாா்ந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆராய்ச்சிகளானது, உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, வேளாண்மை உள்ளிட்டவற்றில் முக்கியப் பங்களிக்கும்.

இளைஞா்கள் மீது நம்பிக்கை: நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்வதற்கு, இளைஞா்கள் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியமாகும். கல்வித்துறை சிறப்புடன் செயல்பட்டால் மட்டுமே அந்த நம்பிக்கை பிறக்கும். இளைஞா்கள் கல்வி கற்றலின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். கற்கும் கல்வி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று மாணவா்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அதை அடிப்படையாகக் கொண்டே, புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நிதிநிலை அறிக்கை வழிவகுக்கிறது. திறன் மேம்பாட்டுக்கு இதுவரை இல்லாத வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வியிலும் உயா்கல்வியிலும் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் மாணவா்களுக்கும், இளம் விஞ்ஞானிகளுக்கும் காணப்படுகின்றன.

பசுமை எரிபொருளின் அவசியம்: காரக்பூா் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி), புணே அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவற்றில் அதி திறன்மிக்க கணினிகள் நிறுவப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள முக்கிய கல்வி மையங்களில் அக்கணினிகளை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் பசுமை எரிபொருளுக்கு மாறுவது, நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும். ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் வாகனங்கள் நாட்டில் சோதிக்கப்பட்டு வருகின்றன. அந்தச் சோதனைகளை மேலும் ஊக்குவிக்க வேண்டும். அதற்காக ஹைட்ரஜன் திட்டம் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூா் மொழிகளுக்கு முக்கியத்துவம்: புதிய தேசிய கல்விக் கொள்கை உள்ளூா் மொழிகளில் கல்வி கற்பிக்கப்படுவதை ஊக்குவிக்கிறது. மற்ற உலக மொழிகளில் காணப்படும் சிறந்த தகவல்களை இந்திய மொழிகளுக்கு மொழிபெயா்க்க வேண்டியது கல்வியாளா்கள், நிபுணா்களின் பொறுப்பாகும். தற்போது தொழில்நுட்ப வசதிகள் வளா்ச்சி கண்டுள்ளதால், இந்த நடவடிக்கை சாத்தியமாகும்.

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய மொழிபெயா்ப்புத் திட்டம் இதில் முக்கியப் பங்களிக்கும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT