இந்தியா

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு வழக்கு: விசாரணை மார்ச் 9-க்கு ஒத்திவைப்பு

தினமணி

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவுக்கு எதிராக தாக்கலான மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்கும் வகையில் இந்த விவகாரத்தை மார்ச் 9-ஆம் தேதிக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கக் கோரி கேரள மாநிலம் ஆலுவாவைச் சேர்ந்த ரஸ்ஸல் ஜாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் 2017-இல் மனு தாக்கல் செய்திருந்தார். பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை அறிவிக்கக் கோரிய இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டம் தொடர்பாக கடந்த 2018-இல் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.
 இந்நிலையில், ரஸ்ஸல் ஜாய் கடந்த ஆண்டு ஜூலையில் இடைக்கால மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில், பருவமழை வலுவாக இருக்கும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாத காலங்களில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அணையின் நீர்மட்டத்தை 130 அடியாகக் குறைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு மீது பிப்ரவரி 12-ஆம் தேதி விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டது.
 இதேபோன்று, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜோ ஜோசப் உள்ளிட்ட மூவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவற்றில் "முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழு, தனக்குக் கீழ் செயல்படும் வகையில் ஒரு துணைக் குழுவை அமைத்துள்ளது. அணைப் பாதுகாப்பு, பராமரிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்புக் குழுதான் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கான அதிகாரம் உண்டு. அந்தப் பணியை துணைக் குழுவுக்கு அளிக்கக் கூடாது. குறிப்பாக பருவ மழைக் காலங்களின்போதும், பருவமழை தொடங்குவதற்கும் முன்பும் இந்த ஆய்வை மேற்பார்வைக் குழு மேற்கொள்ள வேண்டும். அணையில் நீரைத் தேக்குவது, பகிர்ந்தளிப்பது, திறக்கும் விகிதம், அணையைத் திறப்பது தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் ஒரு திட்டத்தை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். மேற்பார்வைக் குழு அதன் அதிகாரங்களையும், பணிகளையும் அதற்கு கீழ் உள்ள துணைப் பிரநிதிகள் குழுவுக்கோ அல்லது வேறு எந்த அமைப்புக்கோ அளிக்காமல் இருக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கோரப்பட்டுள்ளது.
 இந்த விவகாரத்தில் தமிழகம், கேரள அரசுகள் பதில் மனுக்கள் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கேரள அரசு தாக்கல் செய்த பதிலில், "முல்லைப் பெரியாறு அணையில் 1939-இல் தயாரிக்கப்பட்ட காலாவதியான கதவு செயல்பாடு அட்டவணையை தமிழகம் பயன்படுத்தி வருகிறது. புதிய கதவு செயல்பாடு அட்டவணை இல்லாததால் வெள்ளக் காலத்தின்போது மிகவும் சிரமம் ஏற்படுகிறது. புதிய கதவு செயல்பாடு அட்டவணையை ஏற்படுத்த வேண்டும் என்று கேரளம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக மேற்பார்வைக் குழு உத்தரவிட்டும் தமிழகம் இன்னும் அதைச் செயல்படுத்தவில்லை' என தெரிவித்திருந்தது.
 அதற்கு தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், "அணையின் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை ஏற்கெனவே எடுத்துள்ளது. மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைக்கேற்பவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே, வழக்குரைஞர் ஜி.உமாபதி ஆகியோர் ஆஜராகினர். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், இந்த மனுவுக்கு பதில் தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். இதையடுத்து, மத்திய அரசு பதில் தாக்கல் செய்யும் வகையில் வழக்கு விசாரணையை மார்ச் 9-ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT