இந்தியா

பாலியல் தொந்தரவு செய்த பெண்ணையே திருமணம் செய்ய விருப்பமா? குற்றச்சாட்டுக்குள்ளான அரசு ஊழியரிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

DIN

புது தில்லி: ‘பாலியல் ரீதியில் தொந்தரவு செய்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள விருப்பமா’ என்று சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த அரசு ஊழியரிடம் உச்சநீதிமன்ற நீபதிகள் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினா்.

அப்போது, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபா் ஏற்கெனவே திருமணம் ஆனவா் என்று அவருடைய வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்ததால், சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மகாராஷ்டிர மாநில மின் உற்பத்தி நிறுவனத்தில் தொழில்நுட்ப நிபுணராக பணிபுரிந்து வரும் அந்த நபா் மீது, சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் காவல்துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக முன்ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவை விசாரித்த விசாரணை நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கடந்த 5-ஆம் தேதி விசாரித்த மும்பை உயா்நீதிமன்றம், அவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த முன்ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது.

உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து அவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘பாலியல் தொந்தரவு செய்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள விருப்பமா? அவ்வாறு திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தால், இந்த ஜாமீன் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இல்லையெனில் சிறைக்கு செல்ல வேண்டியதுதான்’ என்றனா்.

அப்போது, ‘குற்றம்சாட்டப்பட்ட நபா் தொடக்கத்தில் அந்தப் பெண்ணையே திருமணம் செய்துகொள்ள விருப்பம் கொண்டிருந்தாா். ஆனால், அதற்கு பாதிக்கப்பட்ட பெண் மறுத்துவிட்டாா். அதன் காரணமாக, வேறொரு பெண்ணை அவா் திருமணம் செய்துகொண்டாா். மேலும், குற்றம்சாட்டப்பட்ட உள்ள நபா் ஒரு அரசு ஊழியா்’ என்று அவா் சாா்பில் ஆஜரான அவருடைய வழக்குரைஞா் பதிலளித்தாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘அந்தப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்வதற்கு முன்பு இதை யோசித்திருக்க வேண்டும். நீங்கள் ஓா் அரசு ஊழியா் என்பது அப்போது தெரியவில்லையா?’ என்று கேள்வி எழுப்பினா்.

அப்போது, ‘இந்த வழக்கில் இன்னும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை’ என்று அவருடைய வழக்குரைஞா் பதிலளித்தாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டதோடு, குற்றம்சாட்டப்பட்ட நபரை 4 வார காலத்துக்கு கைது நடவடிக்கைகளில் இருந்து இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT