இந்தியா

​மதுரையில் மருந்துசார் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தை விரைவில் அமைக்க வேண்டும்

தினமணி


புது தில்லி: பத்து ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் அமைக்க முடிவு செய்யப்பட்ட மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை விரைவில் அமைக்கக் கோரி மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் சதானந்த கெளடாவை மதுரை, விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்து வலியுறுத்தினர்.

தில்லியில் மத்திய அமைச்சர் சதானந்த கௌடாவை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்த அவர்கள், இதுதொடர்பாக கடிதத்தையும் அளித்தனர். மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசனும், விருதுநகர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூரும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: 

மறைந்த பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால், மருந்துசார் அறிவியலில் மேம்பட்ட படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்காக 1998 -இல் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்திய தொழில்நுட்பக் கழகத்துக்கு நிகராக, மருந்துசார் தொழில் வளர்ச்சி, மருந்துசார் அறிவியல், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு சர்வதேச தரத்துடன் உருவாக்குவது நோக்கமாகக் கொள்ளப்பட்டது. இதன்படி, மத்திய அரசு அடுத்த பத்து ஆண்டுகளில் லக்னௌ, ஹைதராபாத் உள்ளிட்ட 7 தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைத் தொடங்கியது.

பின்னர் 2011, ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற்ற நிதி ஆணையக் கூட்டத்தில் 8-ஆவது தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை மதுரையில் உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு 2011, செப்டம்பர் 13-ஆம் தேதி மத்திய அமைச்சரவையிலும் ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னர், மத்திய செலவினங்கள் துறையும் 2016, ஜூன் 13-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இந்தக் கோப்பு 2018, மார்ச் 26-ஆம் தேதி நிதி ஆணையத்தின் முன் மறுஆய்வு செய்யப்பட்டது. மதுரையில் அமைக்கப்படும் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தமிழக அரசு 116 ஏக்கர் நிலத்தையும் இலவசமாக வழங்கியிருந்தது.

இந்த விவகாரம் நிதி ஆணையத்தின் முன் வைக்கப்பட்டு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான திட்டம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிறுவனத்துக்கான கட்டடம் கட்டப்படவில்லை. இதில் மருத்துவ ரசாயனம், பாரம்பரிய மருந்துகள், மருந்து பகுப்பாய்வு, மருந்தியல் மற்றும் நச்சுயியல், மருந்துகள், மருந்து தொழில்நுட்பம், மருத்துவ ஆராய்ச்சி, உயிரி தொழில்நுட்பம், மருந்தியல் நிர்வாகம் போன்ற முதுகலைப் படிப்புகளும் முனைவர் பட்டம் அளவிலான படிப்புகளும் அளிக்கப்படுகின்றன. இந்தப் படிப்புகள் மூலம் நாடு முழுக்க திறனுள்ள மருந்துகள் கண்காணிக்கப்படும் நிலைமை ஏற்படும். மதுரை போன்ற வளர்ச்சியடைந்த நகரில் இந்த நிறுவனம் அமைக்கப்படுவதன் மூலம் மருத்துவ மையமாகி மற்ற வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கும். எனவே, மக்களின் நலனுக்காக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிறுவனத்தை விரைவாக மதுரையில் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பதில் அளித்த மத்திய அமைச்சர் சதானந்த கெளடா, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தை விரைவில் கூட்டி முடிவு எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT