இந்தியா

பிகார் பெண்ணுக்கு 5 நிமிட இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்திய பரிதாபம்

19th Jun 2021 10:59 AM

ADVERTISEMENT

 

பாட்னா: மருத்துவக் கவனக் குறைவால், பிகார் மாநிலத்தில் ஒரு கிராமப் பெண்ணுக்கு ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த படிப்பறிவு இல்லாத 60 வயது மூதாட்டிக்கு, ஒரு தடுப்பூசி செலுத்திய 5 நிமிடத்தில் மற்றொரு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதிலும் கொடுமை என்னவென்றால், முதல் தடுப்பூசி கோவிஷீல்ட், இரண்டாவது செலுத்தப்பட்டது கோவாக்சின்.

தனக்கு என்ன நேர்ந்தது என்பது கூட தெரியாமல், கரோனா தடுப்பூசிகளை ஒன்றன் பின் ஒன்றாக செலுத்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்துள்ளார் சுனிலா தேவி.

ADVERTISEMENT

வீட்டுக்கு வந்ததும், அவரிடம் குடும்பத்தினர் எப்படி தடுப்பூசி போட்டுக் கொண்டீர்கள் என்று கேட்க, அப்போது அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை அழைத்துக் கொண்டு தடுப்பூசி செலுத்திய இடத்துக்குச் சென்றுள்ளனர்.

அவர்களிடம் நடந்த விவரத்தைக் கூற, அவர்களிடமிருந்து மௌனமே பதிலாகக் கிடைத்துள்ளது.

இதையடுத்து சுகாதாரத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஜூன் 16-ஆம் தேதி நடந்துள்ளது. அவரை மருத்துவர்கள் தங்கள் கண்காணிப்பில் வைத்துள்ளனர். இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட நிலையில், அந்தப் பெண்மணிக்கு கடுமையான உடல்சோர்வு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.

இது பற்றி சுனிலா கூறுகையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் சென்றேன். அங்கே முதலில் எனக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிறகு ஒரு அறையில் இருக்குமாறு கூறினார்கள். அப்போது அங்கிருந்த சிலர் மற்றொரு வரிசையில் நின்றனர். நானும் அவர்களுடன் நின்றிருந்தேன். அங்கே என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. மீண்டும் எனக்கு தடுப்பூசி போடப்பட்டது. அவர் எனக்கு தடுப்பூசி போடும் போது, எனக்கு இப்போதுதான் தடுப்பூசி போட்டார்கள் என்று கூறினேன். ஆனால், அந்த செவிலியர் அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை இரண்டு தடுப்பூசிகளும் ஒரே கையிலேயே போடப்பட்டது என்கிறார் கவலையோடு.

பிறகு கை வலியோடு வீட்டுக்குத் திரும்பி வந்து, அங்கு நடந்ததை தனது மகனிடம் கூற, உறவினர்களும் குடும்பத்தினரும் மருத்துவமனைக்குச் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிறகு தவறிழைத்த செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவ நிர்வாகம் உறுதியளித்து இரண்டு செவிலியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

Tags : vaccine Bihar Covishield Covaxin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT