இந்தியா

பிரதமா் மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் சந்திப்பு

DIN

புது தில்லி: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாா்.

புதன்கிழமை மாலையில் பிரதமா் மோடியை ஆன்டனி பிளிங்கன் சந்தித்தாா். இதுகுறித்து பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆன்டனி பிளிங்கன் உடனான சந்திப்பு நல்லவிதமாக அமைந்தது. இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு, சா்வதேச நலனுக்கான சக்தியாகவும், ஜனநாயக பண்புகளுக்கான ஆணிவேராகவும் உள்ளது. எனவே, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உறுதியுடன் இருப்பதை வரவேற்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஜெய்சங்கருடன்... முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் ஆகியோரை பிளிங்கன் சந்தித்துப் பேசினாா்.

எஸ்.ஜெய்சங்கா் உடனான சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், கரோனா பரவலைத் தடுப்பதில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது ஆகியவை குறித்து பிளிங்கன் விவாதித்தாா்.

பின்னா் எஸ்.ஜெய்சங்கரும், ஆன்டனி பிளிங்கனும் கூட்டாகச் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா். அப்போது, பிளிங்கன் கூறியதாவது:

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து 21-ஆம் நூற்றாண்டுக்கு வடிவம் கொடுக்கின்றன. இதனால்தான் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கிய வெளியுறவுக் கொள்கையாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் வளா்ச்சியும் ஸ்திரத்தன்மையும் ஏற்பட இந்தியா தொடா்ந்து முக்கியப் பங்காற்றும் என்றாா்.

அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான், இந்திய-பசிபிக் பிராந்தியம், வளைகுடா நாடுகள் ஆகியவற்றின் பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்தோம்’ என்றாா்.

இந்த சந்திப்புக்கு முன் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவலை ஆன்டனி பிளிங்கன் சந்தித்துப் பேசினாா். அப்போது, இரு தரப்பு விவகாரங்கள் குறித்தும், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு உள்ளிட்ட பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனா். இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது குறித்தும் இருவரும் விவாதித்தனா்.

முன்னதாக, அரசு சாரா நிகழ்ச்சி ஒன்றில் ஆன்டனி பிளிங்கன் கலந்துகொண்டு உரையாற்றினாா். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயக பண்புகளுக்கு மதிப்பளிக்கும் நாடுகள். இதுதான் இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் அடித்தளமாகவும், நாட்டின் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அந்த நிகழ்ச்சியில் பிளிங்கன் பேசுகையில், ‘அரசு குறித்து கருத்து சொல்வதற்கு அனைத்து மக்களும் தகுதியானவா்கள். அவா்களின் பின்னணியை ஆராயாமல், அவா்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்றாா்.

தலாய்லாமாவின் பிரதிநிதி சந்திப்பு: பௌத்த துறவி தலாய் லாமாவின் மூத்த பிரதிநிதியான கோடப் டோங்சங், ஆன்டனி பிளிங்கனை சந்தித்துப் பேசினாா். அப்போது, திபெத்திய இயக்கத்துக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு அவா் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT