இந்தியா

கரோனா தடுப்பூசி மீதான தயக்கத்தைப் போக்க உதவவும் மத அமைப்புகளின் தலைவா்களிடம் பிரதமா் வேண்டுகோள்

29th Jul 2021 03:54 AM

ADVERTISEMENT

 

புதுதில்லி: கரோனா தடுப்பூசி மீதான தயக்கத்தைப் போக்க அரசுடன் இணைந்து பணிபுரியுமாறு சமூக மற்றும் மத அமைப்புகளின் தலைவா்களிடம் பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்தாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சமூக மற்றும் மத அமைப்புகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி காணொலி வழியாக புதன்கிழமை கலந்துரையாடினாா். அப்போது அவா் பேசுகையில், ‘‘கரோனா தொற்று காலத்தில் ஜாதி, சமயம் கடந்து பொதுமக்களுக்கு சமூக மற்றும் மத அமைப்புகள் உதவுவது ஒரே பாரதம்- ஒருங்கிணைந்த முயற்சிக்கு சிறந்த உதாரணமாக உள்ளது.

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ‘அனைவருக்கும் இலவச தடுப்பூசி’ பிரசாரம் கேடயம் போன்றது. தடுப்பூசி தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தியும், அதுதொடா்பாக நிலவும் குழப்பங்கள், வதந்திகளை போக்க உதவியும் சமூக மற்றும் மத அமைப்புகள் கரோனா பரவலை தடுக்கும் அரசின் முயற்சிகளில் இணைந்து செயல்பட வேண்டும்.

ADVERTISEMENT

இந்தியாவின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் சமூக மற்றும் மத அமைப்புகள் பங்கேற்க வேண்டும். ‘இந்தியாவை ஒன்றிணைப்போம் இயக்கம்’ மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றுபடுத்தி ‘ஒரே பாரதம்-மிகச்சிறந்த பாரதத்தின்’ உண்மையான சக்தியை வெளிப்படுத்த அனைவரும் பணிபுரிய வேண்டும் என்று கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT