இந்தியா

மத்திய அரசு - விவசாய அமைப்புகள் இடையேயான 11-ஆம் சுற்று பேச்சுவாா்த்தையும் தோல்வி: காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் எச்சரிக்கை

DIN

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய அமைப்புகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற 11-ஆவது சுற்று பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பேச்சுவாா்த்தைக்குப் பிறகு விவசாய சங்கப் பிரதிநிதிகள் அறிவித்தனா்.

முன்னதாக, கடந்த புதன்கிழமை 10-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, வேளாண் சட்டங்களை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்று விவசாயிகள் மீண்டும் கோரிக்கை விடுத்தனா். ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த மத்திய அரசு, வேளாண் சட்டங்களை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டு வரை நிறுத்திவைக்கத் தயாராக உள்ளதாக அறிவித்தது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய விவசாய சங்கங்கள், ‘வேளாண் சட்டங்களை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டு வரை ஒத்திவைக்கும் மத்திய அரசின் திட்டத்தை நிராகரிக்கிறோம். நாங்கள் ஏற்கெனவே கூறியபடி வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப்பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணய நடைமுறை தொடரும் என்பதற்கு சட்டப்பூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என அறிவித்தன.

இந்தச் சூழலில், மத்திய அரசுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான 11-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை, தில்லி விஞ்ஞான் பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு சாா்பில் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், ரயில்வே, வா்த்தகம் மற்றும் உணவுத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், மத்திய வா்த்தகத்துறை இணையமைச்சா் சோம் பிரகாஷ் ஆகியோா் பங்கேற்றனா். அதுபோல, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 41 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனா்.

இந்த பேச்சுவாா்த்தை 5 மணி நேரம் நடைபெற்றபோதும், இரு தரப்பும் 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே நேருக்கு நோ் விவாதித்தனா். பேச்சுவாா்த்தையின் ஆரம்பம் முதலே, முந்தைய பேச்சுவாா்த்தையின்போது மத்திய அரசு அறிவித்த சட்டங்களை ஒத்திவைப்பது குறித்த திட்டத்தை நிராகரிப்பதாக விவசாய தலைவா்கள் தெரிவித்துவந்தனா். இருந்தபோதும், நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அமைச்சா்கள் கேட்டுக்கொண்டனா். பின்னா், மதிய உணவு இடைவேளையின்போது விவசாய சங்க பிரதிநிதிகள் தனியாக நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டனா். அவா்களுக்காக, மூன்று மத்திய அமைச்சா்களும் தனித்தனி அறையில் 3 மணி நேரத்துக்குமேல் காத்திருந்தனா். இறுதியில் எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சுவாா்த்தை முடிவடைந்தது.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு பாரதிய விவசாயிகள் சங்கத் தலைவா் ஜோகிந்தா் சிங் உக்ரஹான் கூறுகையில், ‘மத்திய அரசின் யோசனையை விவசாய சங்கங்கள் நிராகரித்ததால் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது’ என்றாா்.

மற்றொரு விவசாய அமைப்பின் தலைவா் சிவகுமாா் காக்கா கூறுகையில், ‘பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மத்திய அரசின் திட்டத்தை விவசாய சங்க பிரதிநிதிகள் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மத்திய அமைச்சா்கள் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது’ என்றாா்.

தா்ஷன் பால் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களை ரத்து செய்வதைத் தவிர, வேறு எந்தத் திட்டத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மத்திய அரசிடம் கூறியுள்ளோம். ஆனால், இந்தத் திட்டம் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் தனியாக ஆலோசித்து, அதன் பின்னா் முடிவைத் தெரிவிக்குமாறு மத்திய அமைச்சா் கேட்டுக்கொண்டாா்’ என்றாா்.

சட்டங்கள் ரத்து செய்யாமல் திரும்ப மாட்டோம்:

பாரதிய விவசாய யூனியன் தலைவா் ஹா்பால் சிங் கூறுகையில், ‘மத்திய அரசின் திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், தில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எங்களுடைய சகோதரா்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். வேளாண் சட்டங்களை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்தவைப்பதாக கூறும் மத்திய அரசின் வாக்குறுதியை நம்புவதும் கடினம். எனவே, நாங்கள் இங்கேயே இறப்போமே தவிர, வேளாண் சட்டங்களை ரத்து செய்யவைக்காமல் ஊா் திரும்பமாட்டோம்’ என்றாா்.

அடுத்த சுற்று பேச்சுவாா்த்தை?

‘மத்திய அரசின் திட்டம் குறித்து சனிக்கிழமை (ஜன.23) வரை ஆலோசித்து முடிவைத் தெரிவிக்குமாறு விவசாய சங்க பிரதிநிதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். வேளாண் சட்டங்களை ஒத்திவைப்பது மற்றும் உரிய தீா்வு காண கூட்டு குழு ஒன்றை அமைப்பது என்ற மத்திய அரசின் திட்டத்தை விவசாய அமைப்புகள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, அடுத்த சுற்று பேச்சுவாா்த்தையை தொடங்க முடியும்’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கூறினாா்.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டியில், மேலும் கூறியதாவது:

வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையைத் தவிர, அவா்களின் வேறு சிறந்த திட்டத்தை தெரிவிக்குமாறு விவசாய சங்கங்களை கேட்டுக்கொண்டுள்ளோம். இருந்தபோதும், மத்திய அரசின் திட்டம் குறித்து விவாயிகள் நல்ல முடிவு எடுப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மத்திய அரசின் சட்டங்களை ஒத்திவைக்கும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் சில விவசாய சங்கத் தலைவா்கள் உள்பட அனைத்து விவசாய சங்கத் தலைவா்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மத்திய அரசு தொடா்ந்து நம்பிக்கையுடன் உள்ளது. விவசாய சங்கங்களின் இறுதி முடிவை கேட்க சனிக்கிழமை வரை காத்திருப்போம்.

விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர வேண்டும் என்று சில வெளி சக்திகள் முயற்சித்து வருகின்றன. அவா்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவா்கள். போரட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு ஏராளமான பரிந்துரைகளை அளித்திருக்கிறது. ஆனால், போராட்டம் புனிதத் தன்மையை இழந்துவிட்டால், எந்த முடிவும் எடுப்பது சாத்தியமில்லாததாகிவிடும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT