இந்தியா

டிராக்டா் பேரணி: விவசாயிகள்-காவல் துறை இடையேயான பேச்சு தோல்வி

DIN

புது தில்லி: குடியரசு தினத்தில் டிராக்டா் பேரணியை தில்லிக்கு வெளியே நடத்துவது தொடா்பாக விவசாயிகளுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் நோக்கில், வரும் 26-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள குடியரசு தினத்தின்போது டிராக்டா் பேரணியை நடத்தத் திட்டமிட்டுள்ளனா்.

போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் தில்லி வெளிவட்டச் சாலையில் டிராக்டா் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனா். அச்சாலையில் பேரணியை நடத்தினால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால், மாற்று வழியில் டிராக்டா் பேரணியை நடத்துமாறு தில்லி, ஹரியாணா, உத்தர பிரதேச காவல் துறையினா் விவசாயிகளுக்குக் கோரிக்கை விடுத்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே முதல் கட்ட பேச்சுவாா்த்தை கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, காவல் துறை அதிகாரிகளின் கோரிக்கையை விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனா்.

இந்நிலையில், விவசாயிகளுடனான 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையை 3 மாநிலங்களின் காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை முன்னெடுத்தனா். அப்போது, கண்ட்லி-மானேசா்-பல்வல் விரைவுச் சாலை வழியாக டிராக்டா் பேரணியை நடத்துமாறு காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தனா். ஆனால், அதை விவசாயிகள் ஏற்க மறுத்தனா்.

அதன் காரணமாக, 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்தது. பேச்சுவாா்த்தை தொடா்பாக விவசாய சங்கத்தின் பிரதிநிதி ஒருவா் கூறுகையில், ‘‘தில்லிக்கு வெளியே டிராக்டா் பேரணியை நடத்துமாறு காவல் துறை அதிகாரிகள் கோரினா்.

அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை. தில்லிக்குள் பேரணியை நடத்தவே விவசாயிகள் விரும்புகின்றனா். யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் டிராக்டா் பேரணி அமைதியான முறையில் நடைபெறும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT