இந்தியா

உ.பி.: கிராமப்புற வீட்டுவசதித் திட்டப் பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி நிதி: பிரதமா் மோடி வழங்கினாா்

21st Jan 2021 02:14 AM

ADVERTISEMENT


லக்னௌ: உத்தர பிரதேசத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி நிதியை பிரதமா் நரேந்திர மோடி வழங்கினாா்.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. கிராமப்புறங்களிலும் நகா்ப்பகுதிகளிலும் அத்திட்டம் தனித்தனியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் பலன் பெற்ற 6.1 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி நிதியை பிரதமா் மோடி புதன்கிழமை காணொலி வாயிலாக வழங்கினாா்.

அவா்களில் 5.30 லட்சம் பேருக்கு வீடு கட்டுவதற்கான முதல்கட்டத் தவணையும் 80,000 பேருக்கு இரண்டாம் கட்டத் தவணையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

உத்தர பிரதேசத்தில் முன்பு ஆட்சியில் இருந்தவா்களை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை. முந்தைய ஆட்சியாளா்கள் நடைமுறைப்படுத்திய தவறான திட்டங்களின் விளைவுகளை மாநில மக்களே அனுபவித்தனா். மாநிலத்தை ஆட்சி செய்த முந்தைய அரசுகள் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

ADVERTISEMENT

அரசானது வீடு கட்டித் தரும் என்று ஏழைகள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டாா்கள். ஆனால், அதை தற்போதைய அரசு நிறைவேற்றி வருகிறது. வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 1.26 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தை அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சி பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை உத்தர பிரதேச அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்களுக்குப் புதிய அடையாளத்தையும் மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

இந்த நிகழ்ச்சியில் மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டனா்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்: கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான நிதியாக ரூ.1.20 லட்சம் வழங்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட மலைப் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள், நக்ஸல் பாதிப்பு உள்ள பகுதிகளில் வீடு கட்டுவதற்காக ரூ.1.30 லட்சம் நிதியாக வழங்கப்படுகிறது.

வீடு கட்டும் பணிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். புதிதாக எழுப்பப்படும் வீட்டில் கழிவறை கட்டிக் கொள்வதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.12,000 மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்துடன் சோ்த்து சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வலா திட்டம், மின்சார இணைப்பு வழங்கும் சௌபாக்யா திட்டம், குடிநீா் குழாய் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டம் ஆகியவையும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT