இந்தியா

27 நகரங்களில் மெட்ரோ ரயில் பணிகள்: பிரதமர் நரேந்திர மோடி

DIN


ஆமதாபாத்: நாடு முழுவதும் 27 நகரங்களில் 1,000 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 

ஆமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம் - 2, சூரத் மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியின் காணொலிக் காட்சியில் திங்கள்கிழமை அவர் பேசியதாவது: நமது நாட்டில் ஒரு காலத்தில் மெட்ரோ ரயில் குறித்த நவீன சிந்தனையும், கொள்கையும் இல்லாமல் இருந்தன. அதனால், ஒவ்வொரு நகரத்திலும் பல்வேறு விதமான மெட்ரோ ரயில் திட்டங்கள் அறிமுகமாகியுள்ளன. 

பல்வேறு நகரங்களில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களில் சீரான தன்மை இல்லாமலும், பிற போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாமலும் இருந்தன. தற்போது, பேருந்து, ரயில் போன்ற பிற போக்குவரத்துகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறை கொண்டுவரப்பட்டு மெட்ரோ ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குஜராத்தில் ரூ.17,000 கோடியில்... குஜராத் மாநிலம் ஆமதாபாத், சூரத் ஆகிய பகுதிகளில் ரூ.17,000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நாட்டின் இரண்டு முக்கிய வணிக மையங்களின் இணைப்பு வலுப்படுத்தப்படும். ஒருங்கிணைந்த நகர்ப்புற போக்குவரத்து முறையை அரசு மேம்படுத்தி வருகிறது.

விரைவான விரிவாக்கம்: நாடு முழுவதும் மெட்ரோ ரயில் திட்டத்தை வேகமாக விரிவாக்கம் செய்ததுதான் என்னுடைய அரசுக்கும், முந்தைய அரசுக்கும் உள்ள வேறுபாடு. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு 10 முதல் 12 ஆண்டுகளில் 225 கி.மீ.க்கு மட்டுமே மெட்ரோ ரயில் வழித்தடம் செயல்பட்டு வந்தது. கடந்த 6 ஆண்டுகளில் 450 கி.மீ.க்கு மேல் மெட்ரோ ரயில் வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன.  தற்போது, இந்தியா முழு நம்பிக்கையுடன் முடிவுகளை எடுத்து அதனை செயல்படுத்தி வருகிறது. 

குழாய் மூலம் குடிநீர் மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் குஜராத்தில் 21 லட்சம் மக்கள் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலம் குஜராத்தில் மட்டும் ஏழைகளுக்காக 2.5 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.

ஆமதாபாதில்...ஆமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம்- 2 சுமார் 28.25 கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழித்தடங்களில்  செயல்படுத்தப்படுகிறது. முதலாவது வழித்தடம் மோடேரா மைதானம் முதல் மகாத்மா மந்திர் வரையில் சுமார் 22.8 கி.மீ. தொலைவுக்கும், இரண்டாவது வழித்தடம் குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் முதல் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் (ஜிஐஎஃப்டி சிட்டி) வரையில் 5.4 கி.மீ. தொலைவுக்கும் செயல்படுத்தப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.5,384 கோடி ஆகும். சுமார் 6.5 கி.மீ. தொலைவிலான ஆமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம்- 1ஐ 2019 மார்ச் மாதம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

சூரத்தில்... சூரத் மெட்ரோ ரயில் திட்டம் சுமார் 40.35 கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழித்தடங்களில்  செயல்படுத்தப்படுகிறது. முதலாவது வழித்தடம் சர்தானா முதல் டிரீம் சிட்டி வரையில் 21.61 கி.மீ. தொலைவுக்கும், இரண்டாவது வழித்தடம் பேஸன் முதல் சாரோலி வரையில் 18.74 கி.மீ. தொலைவுக்கும் செயல்படுத்தப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.12,020 கோடி ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT