இந்தியா

பைடன் நிர்வாகத்தில் 20 இந்திய அமெரிக்கர்கள்!

DIN

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் 13 பெண்கள் உள்பட 20 இந்திய-அமெரிக்கர்களை முக்கியப் பொறுப்புகளில் நியமனம் செய்துள்ளார். அமெரிக்க மக்கள்தொகையில் ஒரு சதவீதமே உள்ள இந்திய சமூகத்துக்கு இத்தனை பிரதிநிதித்துவம் தரப்படுவது சாதனையாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடன் வரும் 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கிறார்.  அமெரிக்க வரலாற்றிலேயே துணை அதிபராக ஒரு பெண் பதவியேற்பது இதுவே முதல் முறையாகும். மேலும், துணை அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் முதல் ஆப்பிரிக்க - அமெரிக்கர் என்கிற பெருமையையும் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸுக்கு உச்சநீதிமன்ற பெண் நீதிபதியான சோனியா சோட்டோமேயர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார்.

இதுதவிர அதிபர் பதவியேற்புக்கு முன்னரே நிர்வாகத்தில் இந்திய - அமெரிக்கர்கள் பலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நீரா தாண்டன். இவர் வெள்ளை மாளிகை அலுவலகத்தின் நிர்வாகம் மற்றும் நிதிநிலை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க சர்ஜன் ஜெனரலாக டாக்டர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதித்துறை உதவி அட்டர்னி ஜெனரலாக வனிதா குப்தா, குடிமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான துணைச் செயலராக முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி உஸ்ரா ஷெயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடனின் கொள்கை இயக்குநராக மாலா அடிகா, ஜில் பைடன் அலுவலகத்தின் டிஜிட்டல் இயக்குநராக கரிமா வெரிமா, வெள்ளை மாளிகை துணை ஊடகச் செயலராக சப்ரினா சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகை அலுவலகத்தின் டிஜிட்டல் உத்திகள் பிரிவு மேலாளராக ஆயிஷா ஷா, வெள்ளை மாளிகையில் தேசிய பொருளாதார கவுன்சில் துணை இயக்குநராக சமீரா ஃபாஸிலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய - அமெரிக்கர்களான இவர்கள் இருவரும் காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகை தேசிய பொருளாதார கவுன்சிலில் மற்றொரு துணை இயக்குநராக பரத் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒபாமா நிர்வாகத்தில் வெள்ளை மாளிகையில் பணியாற்றிய கௌதம் ராகவன் வெள்ளை மாளிகையில் அதிபரின் தனி அலுவலக துணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பைடனின் நம்பிக்கைக்குரியவராக பல ஆண்டுகளாக அறியப்படும் வினய் ரெட்டி, கருத்து உருவாக்கும் குழுவின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேதாந்த் படேல், அதிபரின் உதவி ஊடகச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவில் இணையவுள்ள மூன்றாவது இந்திய அமெரிக்கர் இவர்.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான முதுநிலை இயக்குநராக தருண் சாப்ரா, தெற்காசிய பிரிவு முதுநிலை இயக்குநராக சுமோனா குஹா, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளராக சாந்தி கலாதில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகையின் உள்நாட்டு பருவநிலை கொள்கைகள் அலுவலகத்தின் பருவநிலை கொள்கைகள் மற்றும் புதுமைக்கான முதுநிலை ஆலோசகராக சோனியா அகர்வால், கரோனா நடவடிக்கைக் குழுவின் கொள்கை ஆலோசகராக விதுர் சர்மா,  ஆலோசனை அலுவலகத்தில் உதவி ஆலோசகராக நேகா குப்தா, துணை உதவி ஆலோசகராக ரீமா ஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பைடன் தனது தேர்தல் பிரசாரத்தின்போதே, வெற்றி பெற்று அதிபரானால் தனது நிர்வாகத்தில் இந்திய-அமெரிக்கர்கள் பெருமளவில் இடம்பெறுவார்கள் எனக் கூறியிருந்தார்.

"அமெரிக்காவில் பொதுச் சேவையில் இந்திய-அமெரிக்க சமூகம் காட்டிய நீண்டகால அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்' என இந்திய புலம்பெயர்ந்தோர் அமைப்பின் நிறுவனர் எம்.ஆர்.ரங்கசுவாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT