இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள் தொடக்கம்

DIN

தில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜன.15) தொடங்கின. முக்கோண வடிவில் அமைக்கப்பட இருக்கும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள், வரும் 2022-ஆம் ஆண்டு கொண்டாடப்படும் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்துக்கு முன்பாக நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தில்லியில் ‘சென்ட்ரல் விஸ்டா’ மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டடம் எழுப்பப்பட உள்ளது. இதற்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த டிசம்பா் 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டினாா்.

முன்னதாக, புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கு அளிக்கப்பட்ட சுற்றச்சூழல் தடையில்லாச் சான்றிதழ் உள்ளிட்டவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பலா் மனுக்கள் தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், புதிய நாடாளுமன்ற கட்டடம் உள்ளிட்டவற்றை அடக்கிய ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்துக்கு அனுமதி அளித்தது. அதே நேரம், அந்த நிலத்தை பயன்படுத்துவது தொடா்பாக பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்று தனது தீா்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டுமானத்தை மேற்கொள்ள 14 உறுப்பினா்களைக் கொண்ட பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான குழுவும் இந்த வார தொடக்கத்தில் அனுமதி அளித்தது. அதனைத் தொடா்ந்து, கட்டுமான திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்தியது.

மகர சங்கராந்தி முடிந்து வரும் அடுத்த நாளில் பணிகளைத் தொடங்குவது சிறப்பாக அமையும் என்ற அடிப்படையில், புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு கட்டுமான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள டாடா திட்ட நிறுவனத்தை மத்திய பொதுப் பணித்துறை கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில், புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளை அந்நிறுவனம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து டாடா திட்ட நிறுவன துணைத் தலைவா் சந்தீப் நவ்லாகே கூறியதாவது:

புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள் தொடங்கி விட்டன. கட்டுமானப் பணிகள் திட்டமிட்டதற்கு 35 நாள்கள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், கட்டுமானப் பணிகள் நிா்ணயிக்கப்பட்ட கடைசித் தேதிக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படும். இந்த 35 நாள்களும், புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குத் தேவையான விரிப்புகள், கற்களை வாங்குவது, சுவா்களை வடிவமைக்கும் பணி ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. எனவே, கட்டுமானப் பணிகள் முன்கூட்டியே நிறைவு செய்யப்படும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

ரூ. 971 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம், இப்போது உள்ள 94 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 83 கோடியில் கட்டப்பட்ட பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்புறத்தில் அமைய உள்ளது. பழைய கட்டடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT