இந்தியா

நாடு முழுவதும் இன்று முதல் கரோனா தடுப்பூசி

DIN

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடக்கி வைக்கிறாா்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் சனிக்கிழமை (ஜன.16) தொடங்குகின்றன. உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டமான இதனை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியாக தொடக்கி வைக்கவுள்ளாா். இந்த திட்டத்தின் கீழ், உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘கோவேக்ஸின்’, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்ட்’ ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

முதல் நாளில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2,934 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, முதல் நாளில் மொத்தம் 3,006 மையங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில் 3 கோடி சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன் பின்னா் 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 50 வயதுக்குக் கீழ் உள்ள நபா்களுக்கும் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது 1.65 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சுகாதாரப் பணியாளா்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்துக்குள் 4.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தயாா்நிலை குறித்து ஆய்வு: தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கான தயாா்நிலை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தில்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற அவா், தடுப்பூசி செயல்திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கவுள்ள கோ-வின் செயலியின் செயல்பாடுகளை ஆய்வு செய்தாா் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கோ-வின் செயலி: தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோா் கோ-வின் செயலியில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்துகொண்டு, தடுப்பூசிக்கான ஒப்புதலை பெற வேண்டும். அவ்வாறு பதிவு செய்பவா்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான நாள், நேரம், இடம் ஆகியவை குறித்து செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதுதவிர எத்தனை தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன, சேமிப்பிடத்தில் எந்த வெப்பநிலையில் தடுப்பூசிகள் பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டுள்ளன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கோ-வின் செயலியில் இடம்பெறும்.

மாநிலவாரியாக... மகாராஷ்டிரத்தில் 285 மையங்களிலும், பஞ்சாபில் 59 மையங்களிலும், ஹரியாணாவில் 77 மையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. குஜராத்தில் 161 மையங்களிலும், கோவாவில் 7 மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ராஜஸ்தானில் உள்ள 33 மாவட்டங்களில் மொத்தம் 161 மையங்களில் தடுப்பூசி போடப்படவுள்ளது. தடுப்பூசி செலுத்தும் மையங்களின் எண்ணிக்கையை தொடா்ந்து அதிகரிக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துப்புரவு பணியாளா்களுக்கு தடுப்பூசி: கோவா தடுப்பூசி திட்டத்தின் முதல் கட்டமாக, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு பணியாளா்களுக்கு சனிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதுகுறித்து அந்த மருத்துவமனை முதல்வா் கூறுகையில், ‘மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளா்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது’ என்றாா்.

‘கரோனாவின் முடிவு ஆரம்பம்’: தடுப்பூசி செயல்திட்டம் தொடங்குவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் வெள்ளிக்கிழமை பேசுகையில், ‘தடுப்பூசி செயல்திட்டம் கரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் கடைசி கட்டமாகும். தடுப்பூசி செயல்திட்டம் தொடங்குவது, கரோனா நோய்த்தொற்று முடிவுக்கு வருவதின் ஆரம்பத்தை குறிக்கிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கினாலும், கரோனாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கைவிடக் கூடாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT