இந்தியா

ஜனவரி 29-இல் தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா்

DIN

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

இது தொடா்பாக மக்களவை செயலகமும் மாநிலங்களவை செயலகமும் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. கரோனா நோய்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பை விதிமுறைகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடா் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வரும் 29-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரானது மாா்ச் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு மாநிலங்களவை காலை வேளையிலும் மக்களவை மாலையிலும் கூடுகிறது. கடந்த மழைக்காலக் கூட்டத் தொடரின்போது ரத்து செய்யப்பட்டிருந்த கேள்வி நேரம், பட்ஜெட் கூட்டத் தொடரில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சா்கள் அல்லாத எம்.பி.க்கள் மசோதாக்களைத் தாக்கல் செய்வதற்கு கடந்த கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடரில் அதற்கும் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலுக்கிடையே நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடா் கடும் பாதுகாப்பு விதிமுறைகளுடன் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 14-ஆம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. அப்போது மக்களவை தினமும் 4 மணி நேரம் மட்டுமே கூடியது.

பிப். 1-இல் பட்ஜெட் தாக்கல்:

பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மக்களவை 5 மணி நேரம் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால், தொழில்துறை உள்ளிட்டவை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. நாட்டின் பொருளாதாரமும் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. நாட்டை மீண்டும் வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு துறைகளுக்கான சலுகைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இத்தகைய சூழலில், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டில் கரோனா தொற்று பரவல் தொடங்கிய பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால் அதன் மீதான மக்களின் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் பல்வேறு சலுகைத் திட்டங்களை மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா பரவல் காரணமாக நிதிநிலை அறிக்கையை அச்சிட்டு வழங்கப் போவதில்லை என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. மின்னணு வடிவிலேயே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT