இந்தியா

கரோனா தடுப்பூசி பணிக்கு வாக்காளா் பட்டியல்: தோ்தல் ஆணையம் அனுமதி

DIN

கரோனா தடுப்பூசி போடும் பணியில் வாக்குச்சாவடி அளவில் உரிய பயனாளிகளை அடையாளம் காணும் பணிக்கு, வாக்காளா் பட்டியல் புள்ளி விவரங்களைப் பயன்படுத்திக்கொள்ள தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

அதே நேரம், தடுப்பூசி போடும் பணி முடிவடைந்தவுடன் அந்தப் புள்ளி விவரங்களை அழித்துவிட வேண்டும் என்று மத்திய அரசை தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய தீநுண்மியியல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது. அந்தத் தடுப்பூசியும் மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியும் சனிக்கிழமை (ஜன.16) முதல் தேதி முதல் நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட உள்ளன.

முதல் கட்டமாக, கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடும் 1 கோடி சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்படும். அடுத்து முன்கள பணியாளா்கள் 2 கோடி பேருக்கு போடப்படும். அதன் பிறகு, 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த நிலையில், தடுப்பூசிக்கான உரிய பயனாளிகளை வாக்குச்சாவடி அளவில் அடையாளம் காண, இந்திய தோ்தல் ஆணையத்தின் உதவியை உள்துறை அமைச்சகம் நாடியது. இதுதொடா்பாக, இந்திய தலைமை தோ்தல் ஆணையரை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் நீதி ஆயோக் அதிகாரிகள் கடந்த மாதம் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.

அதனைத் தொடா்ந்து, மத்திய உள்துறை அமைச்சக செயலா் அஜய் பல்லா, தலைமை தோ்தல் ஆணையருக்கு கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி கடிதம் எழுதினாா். அதில், வாக்குச் சாவடி அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட கரோனா தடுப்பூசி பயனாளிகளை அடையாளம் காண உதவுமாறு கேட்டுக்கொண்டாா்.

இதற்கு சம்மதம் தெரிவித்து தோ்தல் ஆணையம் சாா்பில் கடந்த 4-ஆம் தேதி பதில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், ‘கரோனா தடுப்பூசி போடும் பணியில் முழு உதவியை வழங்க தோ்தல் ஆணையம் தயாராக உள்ளது. ஆனால், வாக்காளா் பட்டியல் புள்ளி விவரங்கள் குறிப்பட்ட பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்த உடன், அந்தப் புள்ளி விவரங்களை மத்திய அரசு அழித்துவிட வேண்டும்’ என்று தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வாக்காளா் புள்ளி விவரங்கள் பாதுகாப்பாக கையாளப்படுவது தொடா்பாக, மத்திய உள்துறை அமைச்சக மற்றும் மத்திய சுகதாரத் துறை அமைச்சக ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள் தினசரி தொடா்பில் இருப்பா்’ என்று கூறினாா்.

அண்மையில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை தோ்தல்களுக்கு எடுக்கப்பட்ட வாக்காளா் பட்டியல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 50 வயதுக்கு மேற்பட்ட கரோனா தடுப்பூசி பயனாளிகளின் அடையாளம் காணப்பட உள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், கடவுச் சீட்டு, ஓய்வூதிய ஆவணங்கள் உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட அடாயாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை பயனாளிகள் காண்பிப்பது அவசியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT