இந்தியா

பள்ளித் தோழிகளின் கோவா சுற்றுலா பயங்கரத்தில் முடிந்தது; வைரலாகும் கடைசி செல்ஃபி

16th Jan 2021 11:47 AM

ADVERTISEMENT

 

தர்வாத்: கர்நாடக மாநிலம் தர்வாத் அருகே நேற்று காலை டிரக்கும் டெம்போவும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 11 பேர் பலியாகினர். 

இந்த விபத்தில் பலியான பெண்கள் அனைவரும் பள்ளித் தோழிகள் என்றும், கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

ஹுப்பள்ளி - தர்வாத் பைபாஸ் சாலையில் தர்வாத் நகருக்கு 8 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் டெம்போவில் வந்த 10 பெண்கள் மற்றும் அதன் ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்து கேஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. புதிய விதிமுறைகளை அமல்படுத்தும் அவகாசத்தை நீட்டித்தது வாட்ஸ்ஆப்

உயிரிழந்த 10 பெண்களில் 4 பேர் மருத்துவர்கள். மற்றவர்களும் மருத்துவத் துறையில்  பணியாற்றி வந்தவர்கள். பலியான பெண்கள் அனைவரும் பள்ளித் தோழிகள் என்பதும், அவர்கள் பொங்கல் விடுமுறையைக் கொண்டாட கோவா செல்ல வெள்ளிக்கிழமை காலை தேவநாகரியிலிருந்து புறப்பட்டு, காலை உணவு சாப்பிட தர்வாத் வந்திருந்ததும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், மணல் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி, முன்னே சென்ற வாகனத்தை முந்த முற்பட்டபோது, எதிரே பள்ளித் தோழிகளுடன் வந்து கொண்டிருந்த டெம்போ வேனுடன் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வேனில் இருந்த 8 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மற்ற மூன்று பேரும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பலியாகினர்.

உயிரிழந்த பெண்களின் குடும்ப நண்பர் தர்வாத்தில் வசித்து வருகிறார். அவர் கூறுகையில், கோவாவுக்கு சுற்றுலாச் சென்றவர்களுக்காக தர்வாத்தில் காலை உணவு தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால், அவர்கள் வரும் வழியிலேயே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. நாங்கள் பள்ளிக் காலத்திலிருந்து தோழிகள். வெகு நாள்களுக்குப் பின் நாங்கள் அவர்களை சந்திக்க மிகுந்த ஆர்வத்தோடு இருந்தோம் என்கிறார்.

கடைசி செல்ஃபி.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

பள்ளித் தோழிகளான இவர்கள், தங்களது சுற்றுலாவை தொடங்கும் முன்பு, தேவநாகரியில் டெம்போவில் இருந்தபடி ஒரு செல்ஃபியை எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். பள்ளித் தோழிகளுடன் கோவா செல்கிறோம் என்று அதில் பதிவிட்டுள்ளனர். இந்த செல்ஃபி போட்டு சில மணி நேரத்தில் அவர்கள் விபத்தில் சிக்கியது குடும்ப உறுப்பினர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்களது கடைசி செல்ஃபி, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Tags : selfie road accident Karnataka
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT