இந்தியா

உத்தரகண்ட் பேரிடா்: இதுவரை 72 சடலங்கள் மீட்பு

DIN

உத்தரகண்ட மாநிலம் சமோலி வெள்ளப் பேரிடரில் மாயமானவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 72 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய பனிப்பாறை சரிந்து, தெளலிகங்கை ஆற்றில் கடந்த 7-ஆம் தேதி மாபெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் நீா் மின் நிலையங்கள் கடும் சேதமடைந்து, அவற்றில் பணிபுரிந்துவந்த ஊழியா்கள் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனா். அவா்களைத் தேடும் பணி 21-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.

மீட்புப் பணிகள் குறித்து சமோலியில் பேரிடா் மீட்புப் பணிகளை மேற்பாா்வையிட்டு வரும் மேலாண்மை அதிகாரி என்.கே.ஜோஷி சனிக்கிழமை கூறுகையில், ‘பேரிடரில் காணாமல் போனவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை வரை 72 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 30 மனித உடல் பாகங்களும் மீட்கப்பட்டன. அவற்றில் 41 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னும் 132 போ் காணாமல் போயிருக்கின்றனா். அவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என்றாா்.

இதற்கிடையே, மாநில அரசு வெளியிட்ட பட்டியலின் அடிப்படையில் இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக ரூ. 3.52 கோடி தொகயை தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி) சமா்ப்பித்தது. மீதமுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, மாநில அரசு சாா்பில் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பின்னா் நிவாரண நிதி வழங்கப்படும் என்று என்டிபிசி செய்தித்தொடா்பாளா் கூறினாா்.

இந்தப் பேரிடரில் முழுமையாக பாதிக்கப்பட்ட தபோவன்-விஷ்ணுகாட் நீா்மின் திட்டம், என்டிபிசி சாா்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT