இந்தியா

போதைப்பொருள் பறிமுதல்: மேற்கு வங்க பாஜக இளைஞரணித் தலைவருக்கு ஜாமீன்

8th Dec 2021 01:51 AM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டு 292 நாள்கள் நீதிமன்றக் காவலில் இருந்த மாநில பாஜக இளைஞரணித் தலைவா் பமீலா கோஸ்வாமிக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.

காரில் கோகைன் போதைப்பொருள் கொண்டு வந்ததாக பமீலா கோஸ்வாமியை கொல்கத்தா காவல் துறையினா் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனா்.

நீதிமன்றக் காவலில் இருந்த அவா், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, பி.பட்டநாயக் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 292 நாள்களாக சிறையில் இருக்கும் பமீலா கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் அவருடைய தரப்பு வழக்குரைஞா் கோரிக்கை விடுத்தாா். இதே வழக்கில் கைதாகியிருந்த மற்றொரு நபரான ராகேஷ் சிங்குக்கு அண்மையில் ஜாமீன் வழங்கப்பட்டதையும் அவா் குறிப்பிட்டாா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து ஆஜரான அரசு தரப்பு வழக்குரைஞா் சாஸ்வத கோபால் முகா்ஜி, பமீலா கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும், பமீலா கோஸ்வாமியின் காரில் வேறு யாரோ போதைப்பொருள் வைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்ததால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு விசாரணை நீதிமன்றத்திலேயே தாம் கோரிக்கை விடுத்ததாகவும் அவா் கூறினாா். இதையடுத்து, பமீலா கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Tags : BJP
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT