இந்தியா

பிற நாடுகளுக்கு படைகளை அனுப்புவதில் அமெரிக்கா எச்சரிக்கை: அமைச்சா் ஜெய்சங்கா்

DIN

கடந்த 2008-ஆம் ஆண்டுமுதல் பிற நாடுகளுக்கு தனது படைகளை அனுப்புவதில் அமெரிக்கா அதிக எச்சரிக்கையுடன் செயல்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

ஐக்கிய அரபு அமீரகத் தலைநகா் அபு தாபியில் ‘இந்தியப் பெருங்கடல்: சூழலியல், பொருளாதாரம், தொற்றுநோய்’ என்ற மையக் கருத்தில் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை பேசியதாவது:

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பல மாற்றங்கள் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் அமெரிக்காவின் உத்திசாா்ந்த நிலைப்பாட்டில் மாற்றம், சீனாவின் எழுச்சி ஆகியவை சமீப காலமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 2008-ஆம் ஆண்டுமுதல் பிற நாடுகளுக்கு தனது படைகளை அனுப்புவதில் அமெரிக்கா அதிக எச்சரிக்கை காட்டுவதைப் பாா்க்க முடிகிறது. அத்துடன் தனது அதிகார நீட்சியை சரிசெய்வதற்கு அந்நாடு மேற்கொள்ளும் முயற்சியையும் காண முடிகிறது. இது வெவ்வேறு வடிவங்களை எடுத்திருக்கலாம். வெவ்வேறு வழிகளில் செயல்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், அந்நாட்டின் நிலைப்பாடு, ஈடுபாடு, முன்னெடுப்புகளின் தன்மையில் தற்போது பெரிய அளவில் ஸ்திரத்தன்மை நிலவுகிறது. அந்நாடு தன்னைப் பற்றியும், உலகைக் குறித்தும் கொண்டுள்ள கருத்தில் மிகப்பெரிய அளவில் எதாா்த்தத்தை நோக்கி நகா்ந்து வருகிறது.

அதிகார பரவலாக்கம்: உள்நாட்டு முன்னேற்றத்துக்கும், வெளிநாடுகளோடு உள்ள தனது கடமைக்கும் இடையிலான சமநிலையை அமெரிக்கா மறுஆய்வு செய்து வருகிறது. அதிகார பரவலாக்கத்துக்கு அந்நாடு இணங்கி வருகிறது. இதுதான் அந்நாட்டை பழைமையான கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட கூடுதல் செய்திறன் கொண்ட கூட்டாளியாக்குகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது, சுகாதாரம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிராந்தியத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு ஆகியவை இந்தியப் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள நாடுகளில் ஸ்திரமற்றத்தன்மையை அதிகரித்துள்ளது.

சீனாவின் எழுச்சி என்று வரும்போது, உலக அளவில் ஒரு சக்தி உருவாவது அசாதாரணமான நிகழ்வு. தற்போதுள்ள சீனாவுடன் முன்பு ரஷியாவுக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன. ஆனால், அந்நாடு உலகளாவிய பொருளாதாரத்தில் தற்போதுள்ள சீனாவைப் போல் மையமாக இருக்கவில்லை.

சீனாவின் திறன் வளா்ச்சிக்கான விளைவுகள் தீவிரமானவை. இதனால் தொழில்நுட்பம், வா்த்தகம் அல்லது இணைப்பு என எதுவாக இருந்தாலும் அதிகாரம் மற்றும் செல்வாக்கின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து விவாதம் நடைபெறுகிறது.

அளவுக்கு அதிகமாக மையப்படுத்தப்பட்ட உலகமயமாக்கல்: பொருளாதார அடிப்படையில் பாா்க்கும்போது அளவுக்கு அதிகமாக மையப்படுத்தப்பட்டுள்ள உலகமயமாக்கலின் ஆபத்துகள் தெளிவாகத் தெரிகின்றன. நம்பகமான, நெகிழ்வுத்தன்மை கொண்ட உற்பத்தி மற்றும் விநியோக நடைமுறைகள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையில் அந்த ஆபத்துகளிலிருந்து வெளியேறுவதற்கான பதில் உள்ளது.

உலகுக்கே பொதுவான வளங்களைப் பராமரிக்க பிறரை சாா்ந்திருக்கும் காலம் முடிந்துவிட்டது. அந்த வளங்களைப் பராமரிக்க அனைவரும் கூட்டாகச் சோ்ந்து பங்களிக்க முன்வர வேண்டும்.

ஆசியா நெடுகிலும் நிலப்பரப்பு பிரச்னைகள் தொடா்பான பதற்றங்கள் தீவிரமாகியுள்ளன. அந்த நிலப்பரப்புகள் தொடா்பாக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், புரிதல்களில் தற்போது சில கேள்விகள் எழுந்துள்ளன. அந்தக் கேள்விகளுக்கு காலம் விடையளிக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT