இந்தியா

14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த கைதிகளை மாநிலங்களே விடுவிக்கலாம்: உச்சநீதிமன்றம்

DIN

அதிகபட்சமாக 14 ஆண்டு கால தண்டனையைப் பூா்த்தி செய்த கைதிகளை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி (சிஆா்பிசி) விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேநேரத்தில், 14 ஆண்டு தண்டனையை முடிக்காத கைதிக்கு கருணையின் அடிப்படையில் தண்டனையை குறைக்கவோ அல்லது விடுவிக்கவோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி ஆளுநருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும் இதில் மாநில அரசின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் கொண்ட அமா்வு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளது.

‘தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து மாநில ஆளுநரிடம் ஆலோசிக்கத் தேவையில்லை’ என்று ஹரியாணா அரசு 2008, ஆகஸ்ட் 13-ஆம் தேதி கொள்கை திட்டத்தை கொண்டுவந்தது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சிறையில் தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு பாகுபாடில்லாமல் இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி இந்தத் திட்டத்தை திருத்தி அமைக்கும் வாய்ப்புகளை கண்டறிய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதுவரையில், சிஆா்பிசி விதிமுறைகளை பின்பற்றி ஹரியாணா அரசு தண்டனைக் கைதிகளை விடுவிக்கலாம் என்றும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் கொண்ட அமா்வு, ஹரியாணா அரசின் 2008 கொள்கைத் திட்டத்தை அங்கீகரித்து செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘433-ஏ பிரிவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆா்பிசி) கீழ் வரும் வழக்குகளில், 14 ஆண்டு கால தண்டனையை பூா்த்தி செய்த கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.

அதேநேரத்தில், 14 ஆண்டுகளுக்கு குறைந்த தண்டனை பெறும் வழக்கில் உள்ள கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க ஆளுநருக்குத்தான் அதிகாரம் உள்ளது. இதில் மாநில அரசின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

அதே நேரத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வழக்குகளின் கைதிகள், 14 ஆண்டுகள் தண்டனைக் காலம் முடிக்காமல் விடுவிக்கக் கூடாது என்று நீதிபதி ஹேமந்த் குப்தா குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT