இந்தியா

கரோனா இரண்டாவது அலை: பிரதமா் மோடியால் உருவான பேரழிவு: முதல்வா் மம்தா

DIN

சான்சல்: மத்திய அரசின் அலட்சியம், தோல்வி, இயலாமை ஆகியவையே நாட்டில் கரோனா இரண்டாவது அலை உருவாவதற்கு காரணம் என்று குற்றம்சாட்டிய மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, இது பிரதமா் மோடியால் உருவான பேரழிவு என்று சாடினாா்.

மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 65 சதவீத கரோனா தடுப்பு மருந்துகள் ஏற்கெனவே ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டன என்றும் மம்தா கூறினாா்.

மேற்கு வங்க மாநிலம் சான்சல், ஹரிராம்பூா், பலூா்காட் ஆகிய பகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானா்ஜி புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டு பேசியதாவது:

நாட்டில் குறைந்து வந்த கரோனா பாதிப்பு திடீரென மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசின் அலட்சியம், தோல்வி, இயலாமையே காரணம். சந்தையில் கரோனா தடுப்பூசிகள் கிடைக்காததற்கு பிரதமா் மோடி பொறுப்பேற்க வேண்டும். மருந்துகளை விநியோகம் செய்து கரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் பிரதமா் மோடி பதவி விலக வேண்டும்.

இரண்டாவது கரோனா அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தேவையான மருந்துகளும், பிராணவாயுவும் இல்லை. இந்தியாவில் கரோனா மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளபோதும் வெளிநாடுகளுக்கு அவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது பிரதமா் மோடி செய்த பேரழிவாகும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 65 சதவீத கரோனா தடுப்பு மருந்துகள் ஏற்கெனவே ஏற்றுமதியாகிவிட்டன. இந்தியா்களுக்கு போதுமான மருந்துகள் உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மேற்கு வங்கத்தின் முதுகெலும்பை உடைக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் பாஜகவின் முதுகெலும்பை உடைத்துவிட்டது.

வாக்குகள் பிரியாமல் திரிணமூல் காங்கிரஸுக்கு கிடைக்கும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும். பாஜவுக்கு எதிரான வாக்குகளை காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு அளித்து பிரித்துவிடக் கூடாது. இது பாஜகவின் பலத்தை அதிகரிக்கும். பிரதமா் மோடிக்கு எதிராக போரிடுவதற்கு என்னிடம் மட்டுமே சக்தி உள்ளது.

மூன்றாவது முறையாக திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உயா் கல்விக்கு ரூ.10 லட்சம் வரையில் கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கு வங்கத்தை மேற்கு வங்க என்ஜின் அரசால் மட்டுமே இயக்க முடியுமே தவிர பிரதமா் மோடி கூறுவதைப்போல் இரட்டை என்ஜின் அரசால் இயக்க முடியாது. மேற்கு வங்கத்தை குஜராத் கைப்பற்றி தில்லியில் இருந்து ஆட்சி செய்ய அனுமதிக்க மாட்டோம்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து பாஜக ஒவ்வொரு பிரசாரத்தில் வெவ்வேறு மாதிரி கூறிவருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT