இந்தியா

இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே அடுத்த மாதம் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

14th Apr 2021 03:37 AM

ADVERTISEMENT

இந்தியா- ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டின்போது மீண்டும் நடைபெறுகிறது. இப்பேச்சுவார்த்தை ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இந்திய உறவை மேலும் வலுப்படுத்த உதவும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
 ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகளுடனான இந்திய வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த 2007-இல் தொடங்கியது. அதன்பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே தகவல் தொழில்நுட்பத் துறையின் தரவுப் பாதுகாப்பு உள்ளிட்ட சில முக்கிய விஷயங்களில் இருந்த இடைவெளியை அகற்ற இரு நாடுகளும் தவறின. இதனால் கடந்த 2013, மே மாதம் முதல் இந்திய- ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இடையேயான நிபந்தனையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தடைபட்டது.
 இந்நிலையில், போர்ச்சுகல் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அகஸ்டோ சாண்டோஸ் சில்வாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் சந்தித்துப் பேசினார். அப்போது, "மே மாதம் 8-ஆம் தேதி போர்டோவில் நடைபெறும் இந்திய- ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டின்போது வர்த்தகம் மற்றும் முதலீடு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெறும் என்றும், அந்த மாநாட்டில் போர்ச்சுகல் யூனியன் கவுன்சிலின் தலைமைப் பதவி போர்ச்சுகலுக்கு கிடைக்கும் என்றும் போர்ச்சுகல் அமைச்சரிடம் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
 அந்தச் சந்திப்பின்போது, அண்மைக்காலமாக இரு நாடுகளுக்கு இடையேயான மேல்மட்ட சந்திப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த நிர்மலா சீதாராமன், இதன் பலனாக பல ஒப்பந்தங்கள் கூடுதலாக கிடைத்திருப்பதையும் எடுத்துரைத்தார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே 21-ஆம் நூற்றாண்டின் பங்குதாரர்களாகும் வரலாற்றுப் பிணைப்பு உருவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
 இதுதொடர்பாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுட்டுரை பதிவில் கூறியிருப்பதாவது:
 வரலாற்றுத் தொடர்பு, கலாசாரம், இரு நாட்டு மக்களிடையிலான பிணைப்பு ஆகியவற்றில் இந்திய- போர்ச்சுகல் நாடுகளிடையே சிறப்பான உறவு காணப்படுகிறது. இரு ஜனநாயக நாடுகளும் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், முதலீடு, தொழிற்துறை, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என அதில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT