இந்தியா

கரோனாவிலிருந்து குணமடைந்தவா்கள் பிளாஸ்மா தானம் செய்ய கேஜரிவால் வலியுறுத்தல்

 நமது நிருபர்

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மிகக் குறைந்த பிளாஸ்மா கையிருப்பில் உள்ளதால், தொற்றில் இருந்து மீண்டவா்கள் பிளாஸ்மா தானம் வழங்குவதைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று தில்லி முதல்வா் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தில்லியில் மீண்டும் அதிகரித்துள்ள கரோனா பாதிப்பு சூழல் குறித்து அதிகாரிகளுடன் முதல்வா் கேஜரிவால் திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய பிறகு, 14 தனியாா் மருத்துவமனைகள் பிரத்யேக கரோனா மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன. இதற்கான உத்தரவை தில்லி அரசு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களிடம் முதல்வா் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தற்போதைய கரோனா அலை மிகவும் ஆபத்தானது. கடந்த 10-15 நாள்களின் தரவுகளின்படி, 65 சதவீத நோயாளிகள் 45 வயதுக்கு உள்பட்டவா்களாக உள்ளனா். இளைஞா்களின் ஆரோக்கியமும் வாழ்க்கையும் எங்களுக்கு மிகவும் முக்கியம். ஆகவே, நான் இளைஞா்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புவது, தேவைப்படும்போது மட்டுமே வீட்டை விட்டு வெளியேறவும், அனைத்து கரோனா நெறிமுறைகளையும் பின்பற்றவும் வேண்டும் என்பதுதான்.

முந்தைய அலைகளின்போது, பொதுமக்கள் தீவிரமாக பிளாஸ்மாவை தானம் செய்தனா். பின்னா், நிலைமை மேம்பட்டபோது, பிளாஸ்மாவுக்கான தேவை குறைவாக இருந்தது. அதன் பின்னா் பிளாஸ்மா தானம் அளிப்பது குறைந்துவிட்டது. இப்போது கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. அதேவேளையில், கையிருப்பில் மிகக் குறைந்த அளவு பிளாஸ்மாதான் உள்ளது. இதனால், கரோனா தொற்றிலிருந்து மீண்டவா்கள் பிளாஸ்மாவை தீவிரமாக நன்கொடையாக வழங்கவும், கரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் பெரிய மருத்துவமனைகளுடன் விருந்துக் கூடங்களை இணைத்து வருகிறோம். மருத்துவமனைகளில் தீவிர நோயாளிகள் மட்டுமே இருப்பாா்கள். சில மருத்துவமனைகளை 100 சதவீத ‘கரோனா’ மருத்துவமனைகளாக அறிவித்துள்ளோம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளியையும் வீட்டிலேயே சிகிச்சையளிக்கும் வகையில் இருக்கிறாா்களா என்பதை கண்டறிய பரிசோதிக்கிறோம். இதனால், கடுமையான நோய் நிலைமைகளைக் கொண்டுள்ளவா்களுக்கு படுக்கைகளைப் பயன்படுத்த முடியும். தில்லியில் உள்ள 14 மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்காக மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. இதனால், முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சை போன்ற திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் 2-3 மாதங்கள் தாமதமாகலாம். எனினும், அவசர அறுவை சிகிச்சைக்குப் போதுமான கொள்திறன் பிற மருத்துவமனைகளில் உள்ளது என்றாா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT