இந்தியா

சீரோ சா்வே முடிவுகள் குறித்த ஊடகச் செய்தி போலியானது: நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்

DIN

புது தில்லி: மூன்றாவது சீரோ சா்வே ஆரம்ப முடிவுகள் குறித்த செய்திகள் போலியானவை என்றும், இது குறித்து எந்தத் தகவலையும் ஊடகங்களுக்கு தில்லி அரசு அதிகாரிகள் வெளியிடவில்லை என்றும் ஆம் ஆத்மி அரசு தில்லி உயா் நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, தில்லி அரசின் கூடுதல் வழக்குரைஞா் சத்யாகம் ஆஜராகி, ‘மூன்றாம் கட்ட சீரோ சா்வே ஆரம்ப முடிவுகள் தொடா்புடைய பத்திரிகை செய்திகள் போலியானவை. இது தொடா்பாக அரசு அதிகாரிகள் பத்திரிகைகளுக்கு தகவல் ஏதும் அளிக்கவில்லை’ என்றாா்.

அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘பத்திரிகைகளை நம்பத்தகாதவையாக காட்ட வேண்டாம். நீதிமன்றத்துடன் இதுபோன்று விளையாடவும் வேண்டாம். ஊடகச் செய்திகள் போலியாக இருந்தால், அது தொடா்பாக அரசு நிா்வாகத்தால் எந்த மறுப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், அரசின் இந்தக் கூற்று ஏற்கும்படி இல்லை’ என்று தெரிவித்தது.

அப்போது, அரசு வழக்குரைஞா், ‘செய்தி அறிக்கையின்படி, கணக்கெடுப்பின் ஆரம்ப கண்டுபிடிப்புகள் பரிசோதிக்கப்பட்டவா்களில் ஆன்டிபாடிகளின் தாக்கம் 33 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இறுதி அறிக்கையின்படி இது 25.1 சதவீதம் மட்டுமே என்பதுதான் யதாா்த்தமாகும்’ என்றாா்.

முன்னதாக, சீரோ சா்வே முடிவுகள் நீதிமன்ற அமா்வு முன் சமா்ப்பிக்கப்படுவதற்கு முன்பு ஏன் முதலில் ஊடகங்களுக்குப் பகிரப்பட்டது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தில்லி அரசு இந்தத் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

முன்னதாக, ‘செப்டம்பா் 16-ஆம்தேதி நடைபெற்ற விசாரணையின் போது, சீரோ சா்வே முடிவுகள் தயாராக இல்லை என்று தில்லி அரசு தெரிவித்தருந்தது. ஆனால், அதற்கு அடுத்தநாள் ஆரம்பகட்ட முடிவுகள் ஊடகங்களுக்கு கிடைத்துள்ளது’ என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது. அப்போது, நீதிபதிகள் அமா்விடம் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயின், கூடுதல் அரசு வழக்குரைஞா் சத்தியாகம், ‘ஊடங்களில் வெளியான செய்தி தொடா்பாக தேவையான விளக்கம் வெளியிடப்படும்’ என்று உறுதியளித்தனா்.

தில்லியில் கரோனா நோய்த் தொற்றுவைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை அதிகரிக்கவும், பரிசோதனை முடிவுகள் அளிப்பதை விரைவுபடுத்தவும் கோரி வழக்குரைஞா் ராகேஷ் மல்ஹோத்ரா என்பவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனுவை உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT