இந்தியா

உ.பி.யில் சட்டம் ஒழுங்கு மோசம்: முதல்வர் யோகியை சாடும் பிரியங்கா காந்தி

DIN

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். 

உத்தரப்பிரதேசத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் வயல் வெளியில் வேலை செய்து வந்த 20 வயதான பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. இதுகுறித்து வெளியில் செய்தி கசியாமல் இருக்க அப்பெண்ணின் நாக்கை அந்தக் கும்பல் வெட்டியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட அந்தப் பெண் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண், கழுத்து முதுகுப் பகுதிகளில் எலும்பு முறிவுகளுடன் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் செவ்வாய்க்கிழமை பலியானார்.

உ.பி. காவல்துறை தங்களுக்கு உதவி எதுவும் செய்யவில்லை என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். "ஹத்ராஸ், ஷாஜகான்பூர் மற்றும் கோரக்பூரில் நடைபெற்றுள்ள கற்பழிப்பு சம்பவங்கள் மாநிலத்தை உலுக்கியுள்ளன. உ.பி.யில் சட்டம் ஒழுங்கு பெருமளவில் மோசமடைந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. குற்றவாளிகள் வெளிப்படையான குற்றங்களைச் செய்கிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “உத்தரப்பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு யோகி ஆதித்யநாத் தான் பொறுப்பு. இந்தப் பெண்ணைக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT