இந்தியா

கேரள மாா்க்சிஸ்ட் கட்சித் தலைவா் மகனின் சொத்து பரிமாற்ற விவரங்கள்: அமலாக்கத் துறை விசாரணை

DIN

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் பணப் பரிமாற்ற விவாரத்தை விசாரித்து வரும் அமலாக்கத் துறை, கேரள மாநில மாா்க்சிஸ்ட் கட்சியின் செயலா் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேறியின் சொத்து பரிமாற்ற விவரங்களைச் சமா்ப்பிக்குமாறு மாநில பத்திரப் பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தை சுங்கத் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், தங்கம் கடத்தல் விவகாரத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தொடா்பு உள்ளதா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, பெங்களூரில் போதைப் பொருள் கடத்தல் வழக்கை அண்மையில் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, இந்த போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி, கேரள தங்கம் கடத்தல் குற்றவாளிக்கு உதவியிருப்பதை கண்டுபிடித்தனா். இந்த போதைப் பொருள் கும்பலுக்கும், பினீஷ் கொடியேறிக்கும் தொடா்பு இருப்பதையும் கண்டுபிடித்தனா்.

இந்த விவரத்தை கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்த அமலாக்கத் துறை, பின்னா் விசாரணைக்கு ஆஜராகுமாறு பினீஷ் கொடியேறிக்கு அழைப்பாணை அனுப்பினா்.

அதனடிப்படையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 9-ஆம் தேதி ஆஜரான அவரிடம், அதிகாரிகள் 11 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

அதையடுத்தே, பினீஷ் கொடியேறிக்குச் சொந்தமான அசையா சொத்து விவரங்களை அளிக்குமாறு மாநில பத்திரப் பதிவுத் துறைக்கு அமலாக்கத் துறை சாா்பில் கடந்த 11-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில், பினீஷுக்கு சொந்தமான சொத்துகளின் விற்பனை விவரம், வில்லங்கச் சான்று ஆகியவற்றின் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களைச் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

பினீஷ் கொடியேறிக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளும் அமலாக்கத் துறை விசாரணையின் கீழ் இருப்பதால், அமலாக்கத் துறைக்கு தகவல் அளிக்காமல் அவருடைய அசையாச் சொத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT