இந்தியா

யெஸ் வங்கி முன்னாள் தலைவரின் ரூ.127 கோடி சொத்து முடக்கம்

DIN


புது தில்லி: பண மோசடி வழக்கில், யெஸ் வங்கியின் முன்னாள் தலைவர் ராணா கபூருக்கு சொந்தமாக லண்டனில் உள்ள ரூ.127 கோடி மதிப்பிலான வீட்டை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

யெஸ் வங்கியின் மூலம் முறைகேடாக பல கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டதாகவும், அதற்காக வங்கியின் முன்னாள் தலைவர் ராணா கபூர், அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு ரூ. 600 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. 

அதனை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில், ராணா கபூர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்தது அமலாக்கத் துறை. இந்த வழக்கில் ராணா கபூர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது லண்டனில் ராணா கபூருக்கு சொந்தமாகவுள்ள சொத்து முடக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட  அறிக்கையில் கூறியிருப்பதாவது:

லண்டனில் உள்ள தெற்கு ஆட்லி தெருவில், ராணா கபூருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீடு கடந்த 2017}ஆம் ஆண்டில் டாய்ட் கிரியேஷன்ஸ் ஜெர்ஸி லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் ரூ.93 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த சொத்தின் பயனாளி ராணா கபூர்தான். அந்த வீட்டின் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 127 கோடி.

இந்த வீட்டை விற்பனை செய்யத் திட்டமிட்டு, அதற்காக ரியல் எஸ்டேட் ஆலோசகர் ஒருவரை ராணா கபூர் பணியில் அமர்த்தியுள்ளதாக அமலாக்கத் துறைக்கு தகவல் கிடைத்தது. வீடு விற்பனை தொடர்பாக, வலைதளங்களில் வந்த விளம்பரங்கள் மூலமும் உறுதியானது. எனவே, இந்த வீட்டை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இதையடுத்து, சொத்து முடக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றுவதற்காக, பிரிட்டன் அரசு அதிகாரிகளுடன் மத்திய அமலாக்கத் துறை  அதிகாரிகள் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்துவார்கள். பண மோசடி தடுப்பு சட்டத்தின்படி சொத்து முடக்கப்பட்டுள்ளதால், அதை வாங்கவோ விற்கவோ முடியாது என்ற அறிவிப்பை அமலாக்கத் துறை பின்னர் வெளியிடும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல அமெரிக்கா, துபை, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ராணா கபூருக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறை ஏற்கெனவே முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT