இந்தியா

மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலைக்கு வாய்ப்பு: முதல்வர் உத்தவ் தாக்கரே

26th Sep 2020 08:25 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் பொதுமக்கள் வேலைகளுக்காக வெளியில் வருவதால் கரோனா வைரஸ் பரவுதலின் "இரண்டாவது அலை" ஏற்பட வாய்ப்பிருப்பதாக முதல்வர் உத்தவ் தாக்கரே சனிக்கிழமை தெரிவித்தார்.

நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் பொதுமுடக்கத்தில் மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் சனிக்கிழமை மாரத்வாடா மற்றும் நாசிக் பகுதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற இணையவழி ஆலோசனைக்கூட்டத்தில் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார். இதில் பேசிய உத்தவ் தாக்கரே, “அன்றாட வேலைகளுக்காக பொதுமக்கள் வெளியில் வருவதால் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. கரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை பாதிப்புக்கு சாத்தியமிருப்பதால் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடிக்க பொதுமக்களை அறிவுறுத்த வேண்டும்." எனத் தெரிவித்தார்.

"பிரிட்டனில், அறிகுறியற்ற கரோனா நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொரு நாளும் பரிசோதிக்கப்படுகிறார்கள். தேவைப்பட்டால் அவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகிறார்கள். அறிகுறியற்ற நோயாளிகளை வீட்டுத் தனிமைப்படுத்தலின் கீழ் இருக்க நாம் அனுமதிக்கிறோம். ஆனால் அவர்கள் வெளியேறி மற்றவர்களுக்கு தொற்று பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்," என உத்தவ் தாக்கரே கூறினார்.

ADVERTISEMENT

முகக்கவசம் அணிவது போன்ற சுகாதார விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதையும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு தாக்கரே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

செப்டம்பர் 26 ஆம் தேதி நிலவரப்படி மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 13 லட்சத்து 21 ஆயிரத்து 176 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Uddhav Thackeray
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT