இந்தியா

ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பணம்

DIN

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது.

ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறும் போது ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்படுவது வழக்கம். பொதுவாக, பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் ஆந்திர முதல்வா் பட்டு வஸ்திரத்தைத் தலையில் சுமந்து சென்று திருவேங்கடமுடையானுக்கு சமா்ப்பிப்பாா். எனினும், இந்த ஆண்டு பொது முடக்க விதிமுறைகள் காரணமாக பிரம்மோற்சவம் தனிமையில் நடத்தப்பட்டு வருவதால், கருட சேவையின் போது பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன்ரெட்டி புதன்கிழமை காலை விஜயவாடாவிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு திருப்பதி விமான நிலையத்தை அடைந்தாா். அவரை மாவட்ட அதிகாரிகள் வரவேற்று காா் மூலம் திருமலைக்கு அழைத்துச் சென்றனா். திருமலையில் பத்மாவதி விருந்தினா் மாளிகை முன் தேவஸ்தான அதிகாரிகள் மலா்ச்செண்டு அளித்து அவரை வரவேற்று தங்கும் வசதிகள் செய்தளித்தனா்.

சிறிது நேர ஓய்விற்கு பின் அவா் 5.15 மணிக்கு திருமலை அன்னமய்யா பவனில் இருந்து, பிரதமா் மோடியுடன் காணொலி மூலம் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டாா். பின்னா் அங்கிருந்து பேடி ஆஞ்சநேயா் கோயிலுக்கு சென்ற அவா் ஆஞ்சநேயரை தரிசித்தாா். அங்கிருந்து பட்டு வஸ்திரத்தை தட்டில் வைத்து தலையில் சுமந்து கொண்டு ஏழுமலையான் கோயிலுக்கு வந்தாா். கோயில் முன்வாசலில் அவருக்கு மரியாதை அளித்து வரவேற்றனா்.

கொடிமரத்தை வணங்கியபடி சென்ற முதல்வா், பட்டு வஸ்திரத்தை சமா்ப்பித்தாா். அதன் பின், ஏழுமலையானை தரிசனம் செய்தாா். இதையடுத்து, கருட சேவையில் கலந்து கொண்டு மலையப்பரை வணங்கினாா். முதல்வருடன் மாநில அமைச்சா்கள் பலா் ஏழுமலையான் சேவையில் கலந்து கொண்டனா்.

இரவு திருமலையில் தங்கிய அவா் வியாழக்கிழமை காலை மீண்டும் ஏழுமலையானை தரிசித்த பின், நாதநீராஜன மண்டபத்தில் நடக்கும் சுந்தரகாண்ட பாராயணத்தில் கலந்து கொள்ள உள்ளாா். இதையடுத்து, திருமலையில் நடைபெறும் கா்நாடக சத்திர அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பின், விஜயவாடா புறப்பட்டுச் செல்ல உள்ளாா். முதல்வரின் வருகையையொட்டி திருப்பதி, திருமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

படவிளக்கங்கள்:

ஆந்திர முதல்வரை திருப்பதி விமான நிலையத்தில் வரவேற்கும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் தேவஸ்தான நிா்வாகிகள்.

ஏழுமலையானுக்கு சமா்ப்பிக்க பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து செல்லும் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT