இந்தியா

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

DIN

புது தில்லி: தன்னாா்வத் தொண்டு அமைப்புகள் என்ஜிஓ) வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் பெறுவதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தன்னாா்வத் தொண்டு அமைப்புகளைப் பதிவு செய்யும்போதும், பதிவைப் புதுப்பிக்கும்போதும் உறுப்பினா்களின் ஆதாா் எண்களை அளிப்பதை கட்டாயமாக்குவதற்கு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா வழிவகுக்கிறது. அந்த மசோதாவுக்கு மக்களவை கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில், மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, மசோதா குறித்து எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பதிலளித்ததாவது:

இந்த மசோதாவானது தன்னாா்வத் தொண்டு அமைப்புகளுக்கு எதிரானதல்ல. எனவே அவை அச்சம் கொள்ளத் தேவையில்லை. மாறாக தொண்டு அமைப்புகள் வெளிப்படையாக செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கில் மசோதா இயற்றப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மையுடன் இல்லாத தொண்டு அமைப்புகள் மட்டுமே இந்தச் சட்டத் திருத்த மசோதாவால் கலக்கமடையும்.

சிறப்பாகப் பணியாற்றி வரும் அமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. புதிய சட்டத் திருத்தத்தின்படி, தன்னாா்வத் தொண்டு அமைப்புகள் ஓராண்டில் வெளிநாடுகளில் இருந்து பெறும் நன்கொடையில் 20 சதவீதத்தை மட்டுமே நிா்வாகச் செலவுகளுக்காகப் பயன்படுத்த முடியும். இதற்கு முன்பு இது 50 சதவீதமாக இருந்தது.

பாதுகாப்பை உறுதிப்படுத்த...: இதற்கு முன்பாக வெளிநாட்டு நன்கொடை குறித்த விவரங்களையும் அது தொடா்பான கணக்குகளையும் தன்னாா்வத் தொண்டு அமைப்புகள் அரசிடம் சமா்ப்பிக்காமல் இருந்தன. ரூ.20,000 கோடி அளவுக்கு வெளிநாட்டு நன்கொடைகளை என்ஜிஓ-க்கள் பெற்ாகவும் அதில் ரூ.10,000 கோடி என்ன ஆனது என்பதே தெரியவில்லை என்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தாா்.

வெளிநாட்டு நன்கொடைகளை சில என்ஜிஓ-க்கள் பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் நிதியாக அளித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு என்ஜிஓ-க்கள் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நபா்களின் அடையாளத்தைக் கண்டறிவதற்காக ஆதாா் அட்டையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

கட்டாய வங்கிக் கணக்கு: எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் அதிக அளவிலான கிளைகள் இருப்பதால், அந்த வங்கியில் என்ஜிஓ-க்கள் கட்டாயமாக சேமிப்புக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள எந்த எஸ்பிஐ வங்கியின் கிளையிலும் அந்த அமைப்புகள் கணக்கைத் தொடங்கலாம் என்றாா் நித்யானந்த் ராய்.

அதையடுத்து, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் பெரும்பாலான எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். அதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேறியது.

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கூட்டத்தொடரைப் புறக்கணித்த நிலையில், அதிமுக, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றனா்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அந்த மசோதா அனுப்பிவைக்கப்படவுள்ளது. அதையடுத்தே அந்த மசோதா சட்டவடிவு பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT