இந்தியா

முகநூல் துணைத் தலைவருக்கு எதிராக அக்.15 வரை நடவடிக்கை கூடாது

24th Sep 2020 04:02 AM

ADVERTISEMENT


புது தில்லி: வடகிழக்கு தில்லி கலவரம் தொடர்பாக முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனத்தின் இந்தியப் பிரிவு துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜித் மோகன் மீது அக்டோபர் 15 வரை கட்டாய நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று தில்லி சட்டப்பேரவைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
வடகிழக்கு தில்லி கலவரத்தை தூண்டும் வகையில் முகநூலில் சிலர் வெளியிட்ட பதிவுகளை அந்நிறுவனம் நீக்கவில்லை என்றும், அதனால் அந்தக் கலவரத்தை மறைமுகமாக தூண்டும் வகையில் முகநூல் நிறுவனம் நடந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டி, அதுதொடர்பாக தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்க குழு கடந்த சில தினங்களாக விசாரணை நடத்தி வருகிறது. 
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு முகநூல் நிறுவனத்
தின் இந்தியாவுக்கான துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜித் மோகனுக்கு தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்க குழு செப்டம்பர் 10 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் அழைப்பாணைகளை விடுத்திருந்தது. 
இதை எதிர்த்து அஜித் மோகன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கௌல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 
மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தில்லி சட்டப்பேரவைச் செயலர், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம், உள்துறை, மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை, மக்களவை மற்றும் மாநிலங்களவை, தில்லி காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டனர். 
மேலும், அழைப்பாணை தொடர்பாக அஜித் மோகன் மீது வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி வரை தில்லி சட்டப்பேரவைக் குழு கட்டாய நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT