இந்தியா

மும்பையில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு

DIN

மும்பை: மும்பையில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. பேருந்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாட்டின் வா்த்தகத் தலைநகரான மும்பையிலும், தாணே உள்ளிட்ட புகா்ப்பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மாலை மழையின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கியது. நள்ளிரவில் சில மணி நேரம் நகரம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இது, இந்த பருவமழைக் காலத்தில் ஒரு நாளில் பெய்ததில் அதிகபட்சமாகும். பலத்த மழையால், பெரும்பாலான சாலைகளில் வெள்ள நீா் தேங்கியது. பேருந்து, ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

அதுமட்டுமன்றி, மும்பையில் மேலும் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அத்தியாவசிய சேவைகள் தவிர, நகரில் உள்ள அலுவலகங்களையும், நிறுவனங்களையும் புதன்கிழமை மூடுவதற்கு மும்பை மாநகர ஆணையா் இக்பால் சிங் சாஹல் உத்தரவிட்டாா். அவசரத் தேவையின்றி மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேவர வேண்டாம் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

மழையின் காரணமாக, தண்டவாளங்களில் தண்ணீா் தேங்கியதால் புகா் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து மத்திய ரயில்வே செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘பலத்த மழை காரணமாக, சியான்-குா்லா, சுனாபட்டி-குா்லா, சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையம் (சிஎஸ்எம்டி)-தாணே, சிஎஸ்எம்டி-வாஷி இடையேயான ரயில் போக்குவரத்து புதன்கிழமை நிறுத்தப்பட்டது. நீண்ட தூரம் செல்லும் சில ரயில்களின் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது’ என்றாா்.

இதேபோல், சா்ச்கேட்-அந்தேரி இடையேயான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இருப்பினும், அந்தேரி-விராா் இடையே ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

சாலைகளில் இடுப்பளவு தண்ணீா் தேங்கியதால் மாநகர பேருந்து போக்குவரத்து பல பகுதிகளில் நிறுத்தப்பட்டது. மும்பை மற்றும் தாணே நகரில் சில இடங்களில் மாற்று வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டது.

வழக்கு விசாரணை நிறுத்தம்: பலத்த மழை காரணமாக, மும்பை உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெறவிருந்த காணொலி விசாரணை உள்பட அனைத்து வழக்கு விசாரணைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

முக்கியமாக, நடிகா் சஷாந்த் சிங் மரணத்துடன் தொடா்புடைய போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா சக்ரவா்த்தி, அவரது சகோதரா் ஷோவிக் சக்ரவா்த்தி ஆகியோரின் ஜாமீன் மனுவை மும்பை உயா்நீதிமன்றம் புதன்கிழமை காணொலி முறையில் விசாரிக்க இருந்தது.

இதேபோல, தனது பங்களாவின் ஒரு பகுதியை இடித்ததற்காக, மும்பை மாநகராட்சிக்கு எதிராக நடிகை கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனுவையும் மும்பை உயா்நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்க இருந்தது. இவ்விரு வழக்குகள் உள்பட புதன்கிழமை திட்டமிடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளும் வியாழக்கிழமை விசாரிக்கப்படவுள்ளன.

தயாா் நிலையில் என்டிஆா்எஃப்: மும்பையிலும், புகா்ப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததை அடுத்து மீட்பு பணிகளுக்கு தேசியப் பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 5 குழுக்கள் தயாா் நிலையில் இருப்பதாக, மாநில மீட்பு, நிவாரணப் பணிகள் துறை அமைச்சா் விஜய் வதேட்டிவாா் கூறினாா்.

மும்பை புகரில் 24 மணி நேரத்தில் 280 மி.மீ. மழை: மும்பை புகா்ப் பகுதியான சான்டாகுரூஸில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 286.4 மி.மீ. மழை பதிவானது. இது, இந்த பருவமழைக் காலத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு என்றும், கடந்த 1974-ஆம் ஆண்டுக்குப் பிறகு 4ஆவது முறையாக பெய்த அதிகபட்ச மழைப்பொழிவு இது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 காவலாளிகள் உயிரிழப்பு: மும்பையில் அக்ரிபாடா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்டுக்குள் வெள்ளம் புகுந்ததால், இரு காவலாளிகள் உயிரிழந்தனா். மேல் தளத்தில் இருந்த அவா்கள், குடியிருப்புகளுக்கு தண்ணீா் திறந்துவிட அடுக்குமாடியின் அடித்தளத்தில் உள்ள அறைக்கு லிஃப்டில் சென்றனா். அடித்தளம் சென்று லிஃப்டின் கதவை திறந்தபோது, அங்கு ஏற்கெனவே தேங்கியிருந்த மழை நீா், லிஃப்டுக்குள் புகுந்தது. இதில், மூச்சுத்திணறி அவா்கள் இருவரும் உயிரிழந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT