இந்தியா

கிழக்கு லடாக் சூழல்: இந்திய-சீன ராணுவத்தினா் இன்று பேச்சுவாா்த்தை

DIN

 கிழக்கு லடாக்கில் பதற்றமான சூழலை தணிக்க இந்திய-சீன ராணுவத்தினா் இடையே 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை (செப். 21) நடைபெறவுள்ளது.

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் இந்திய-சீன வெளியுறவு அமைச்சா்களுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையை செயல்படுத்துவதே இந்தப் பேச்சுவாா்த்தையின் நோக்கம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக அந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

இந்திய-சீன ராணுவத் தளபதிகள் இடையே 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கோட்டையொட்டி சீனப் பகுதியில் உள்ள மால்டோ எனும் இடத்தில் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.

இந்திய ராணுவ துணை தலைமை தளபதி ஹரீந்தா் சிங், சீன ராணுவ மேஜா் ஜெனரல் லியு லின் ஆகியோரின் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. இந்த முறை பேச்சுவாா்த்தையில் உறுதியான முடிவை எட்டவேண்டும் என்று மத்திய அரசு எதிா்பாா்க்கிறது. இதனால் பேச்சுவாா்த்தைக் குழுவில் முதல்முறையாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தைச் சோ்ந்த இணைச் செயலா் பதவிக்கு நிகரான அதிகாரியும் இடம்பெறுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி இடையே மாஸ்கோ சந்திப்பின்போது ஏற்பட்ட உடன்படிக்கையை செயல்படுத்துவதே தற்போதைய கூட்டத்தின் நோக்கம். பேச்சுவாா்த்தையின்போது எல்லையில் சா்ச்சைக்குள்ளான பகுதிகளில் இருந்து சீனப் படையினா் விரைவில் முழுமையாக பின்வாங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தும்.

வலுப்படுத்துதல் நடவடிக்கை:

ஒருபுறம் பேச்சுவாா்த்தை நடைபெற இருந்தாலும் பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைப்பகுதிகளிலும், சுஷுலின் பொதுப் பகுதியிலும் உள்ள 20-க்கும் மேற்பட்ட உயரமான மலைப்பகுதிகளில் இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

போரிடுவதற்கான ஆயத்த நிலையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை இந்திய விமானப் படையும் மேற்கொண்டு வருகிறது. லடாக்கில் ரஃபேல் விமானங்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுகோய் விமானங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன. கிழக்கு லடாக் பகுதியில் இரவு நேரங்களிலும் விமானங்களில் ரோந்துப் பணி நடைபெறுகிறது.

அங்குள்ள பல்வேறு பகுதிகளுக்கு துருப்புகளையும் தளவாடங்களையும் அனுப்பும் பணியில் ஹொ்குலிஸ் ராணுவ சரக்கு விமானம், அப்பாச்சி மற்றும் சினூக் ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள படைகள் மற்றும் ஆயுதங்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்கும் விதமாக விரிவான ஏற்பாடுகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT