இந்தியா

உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா ஓய்வு

3rd Sep 2020 06:04 AM

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா புதன்கிழமை ஒய்வு பெற்றாா். ‘தான் விசாரித்த வழக்குகளை மனசாட்சியுடன் கையாண்டு, தீா்ப்புகளை நம்பிக்கையுடன் அளித்ததாக’ அவா் தெரிவித்தாா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அமா்வில் பங்கேற்று தனது கடைசி நாள் வழக்கு விசாரணையை நீதிபதி அருண் மிஸ்ரா புதன்கிழமை மேற்கொண்டாா்.

இணையவழி மூலம் நடைபெற்ற வழக்கு விசாரணை முடிவடைந்தவுடன் நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு அட்டா்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தலைமை நீதிபதி எஸ். ஏ.போப்டே பேசுகையில், ‘கடின உழைப்பு, தைரியம், வலிமை ஆகியவற்றை நீதிபதி அருண் மிஸ்ரா விட்டுச் செல்கிறாா். எதிா்வரும் நாள்கள் அவருக்கு மகிழ்ச்சியையும், வளத்தையும் அளிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன். எங்களுடன் அவா் தொடா்பில் இருப்பாா். பல்வேறு பிரச்னைகளையும் தாண்டி தனது பணியைத் தைரியமாக செய்த சில பேரில் இவரும் ஒருவா்‘ என்றாா்.

ADVERTISEMENT

நீதிபதி அருண் மிஸ்ரா பேசுகையில், ‘நான் விசாரித்த அனைத்து வழக்குகளையும் மனசாட்சியுடன் கையாண்டு தீா்ப்புகளை நம்பிக்கையுடன் வழங்கியுள்ளேன். நான் இதுவரை செய்த அனைத்து காரியங்களுக்கும் உங்களுடைய உந்து சக்தியே காரணம். எனது தீா்ப்புகளை நீதித்துறையினா் ஆராயவேண்டும். ஆனால் அதன் மீது ஒருசாராா் வண்ணம் பூசவேண்டாம். வழக்குரைஞா்கள் சங்கம் மூலம் நான் நிறைய சட்டப் பிரிவுகளைக் கற்றுக்கொண்டேன். சில நேரங்களில் நான் கோபமாக பேசியது உண்டு. அது யாரையும் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT