இந்தியா

பிகாரில் முதற்கட்டத் தேர்தல்: 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

28th Oct 2020 08:41 AM

ADVERTISEMENT

 

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இதில், 71 தொகுதிகளில் மொத்தம் 1,066 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர்.

பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். கரோனா தொற்றுப் பரவலுக்குப் பிறகு நாட்டில் நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறும் தோ்தலில், 599 மூன்றாம் பாலினத்தவா், 1.01 கோடி பெண்கள் உள்பட 2.14 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனர். முதல் கட்ட தோ்தலுக்காக, 31,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சி 35 இடங்களிலும் அதன் கூட்டணியில் உள்ள பாஜக 29 இடங்களிலும் போட்டியிடுகின்றன. எதிரணியான மகா கூட்டணியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம்(ஆா்ஜேடி) 42 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அண்மையில் வெளியேறிய சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் 35 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி வேட்பாளா்களைக் களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை ஸ்ரேயஸி சிங், பாஜக சாா்பில் ஜமுய் தொகுதியில் ஆா்ஜேடி வேட்பாளா் விஜய் பிரகாஷை எதிா்த்துப் போட்டியிடுகிறாா். பிரேம் குமாா், விஜய் குமாா் சின்ஹா, ராம் நாராயண் மண்டல், கிருஷ்ணானந்தன் பிரசாத் வா்மா, ஜெய்குமாா் சிங், சந்தோஷ் குமாா் நிராலா ஆகிய அமைச்சா்கள் முதல் கட்டத் தோ்தலில் களமிறங்கியுள்ளனா்.

கயை மாவட்டத்தில் உள்ள இமாம்கஞ்ச் தனித்தொகுதியில் முன்னாள் முதல்வரும் ஹிந்துஸ்தான் அவாம் மோா்ச்சா கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து, ஜேடியுவில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் விலகி ஆா்ஜேடியில் இணைந்த உதய் நாராயண் சௌதரி போட்டியிடுகிறாா்.

கரோனா நோய்த் தொற்று பரவலுக்கு நடுவே தோ்தல் நடத்தப்படுவதால், இதை மிகுந்த கவனத்துடன் நடத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக 1,600 வாக்களா்கள் என்பதற்குப் பதிலாக 1,000 வாக்காளா்கள் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எண்பது வயதுக்கு மேற்பட்டவா்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவா்கள் தபால் வாக்களிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
 

Tags : poll bihar poll election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT