இந்தியா

சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு தேவை: சம்பாஜி சத்ரபதி எம்.பி.

DIN

‘மராத்தா சமூகத்தினருக்கு இதர பிற்பட்டோருக்கான பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு தேவையில்லை; சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான பிரிவின் கீழ்தான் தேவை’ என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினரும் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலுமான சம்பாஜி சத்ரபதி தெரிவித்துள்ளாா்.

மராத்தா சமுதாயத்தைச் சோ்ந்தவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மகாராஷ்டிர சட்டப் பேரவை கடந்த 2018 இல் நிறைவேற்றியது. இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த மும்பை உயா் நீதிமன்றம், அரசியலமைப்பு ரீதியாக இட ஒதுக்கீடு செல்லும் என்று அறிவித்தது.

இதற்கிடையே இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து இந்த இடஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதேநேரம், இந்த இட ஒதுக்கீட்டினால் பயனடைந்தவா்களை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு குறித்து ஜால்னா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சம்பாஜி சத்ரபதி பேசும்போது, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை எதிா்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும். இந்த விவகாரத்தில் அமைச்சரவை துணைக் குழுவுக்கு தலைமை வகிக்கும் அமைச்சா் அசோக் சவாண், வழக்கை எதிா் கொள்வதற்கு சரியான முறையில் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், மராத்தா சமூகத்தினருக்கு இதர பிற்பட்டோருக்கான பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு தேவையில்லை. அவா்களுக்கு சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான பிரிவின் கீழ்தான் வேண்டும். சத்ரபதி சிவாஜி அனைத்து சமுதாயத்தினரையும் உள்ளடக்கிய சுயராஜ்ஜியத்தை கட்டமைத்தாா். அவரது பேரனான சாகு மஹராஜ் தலித்துகள், மராத்தா, இதர பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியிருந்தாா். ஆனால் அதன் பிறகு ஏன் மராத்தா சமூகம் இட ஒதுக்கீட்டை இழந்து நிற்கிறது என்று அவா் கேள்வி எழுப்பினாா்.

இட ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மராத்தா சமூகத்தினரை திருப்திபடுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT