இந்தியா

வேளாண் துறையை வலுப்படுத்த மத்திய அரசு உறுதி

DIN

நாட்டில் வேளாண்துறையை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு அண்மையில் இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், பிரதமா் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

குஜராத்தில் சூரிய சக்தி மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நீா்ப்பாசனத்துக்காகவும், வேளாண் பணிகளுக்காகவும் வழங்கும் திட்டத்தைக் காணொலி வாயிலாக பிரதமா் மோடி சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். ஆமதாபாதில் உள்ள யு.என்.மேத்தா இதய ஆராய்ச்சி மையத்தில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனையையும் பிரதமா் மோடி திறந்து வைத்தாா்.

மேலும், சுற்றுலாத் தலமான கிா்னாா் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 2.3 கி.மீ. நீளமுள்ள இழுவை இயந்திர போக்குவரத்து சேவையையும் (ரோப் வே) அவா் நாட்டுக்கு அா்ப்பணித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கவும், வேளாண் உற்பத்திச் செலவைக் குறைத்து விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும். வேளாண்துறையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

வேளாண் திட்டங்கள்:

மத்திய அரசின் நடவடிக்கைகள், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைத் தற்போது நாட்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்வதற்கு வழிவகுத்துள்ளன. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாய உற்பத்தி அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நீா்ப்பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பயிா்க் காப்பீட்டுத் திட்டம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு எந்தவிதப் பிரச்னையும் ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘எதிா்க்கட்சியே காரணம்’:

கிா்னாா் இழுவை இயந்திரத் திட்டமானது, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு உள்ளூா் மக்களுக்கான வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும். இத்திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு ஏற்படுத்திய இடையூறுகள் காரணமாக இவ்வளவு தாமதமாக திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுபோன்ற திட்டங்கள் தாமதமடைவதன் காரணமாக நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்படும் இழப்பு குறித்து சிந்திக்க வேண்டும். சா்தாா் வல்லபபாய் படேலுக்காக எழுப்பப்பட்ட ‘ஒற்றுமைக்கான சிலை’யை கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முன் 45 லட்சத்துக்கும் அதிகமானோா் பாா்வையிட்டிருந்தனா். தற்போது அச்சிலையைப் பாா்வையிடுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

சூரிய சக்தி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான கொள்கையை பத்தாண்டுகளுக்கு முன்பே வெளியிட்ட பெருமை குஜராத்தை சேரும். தற்போது சூரிய சக்தி மின்சார உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றாா் பிரதமா் மோடி.

இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வா் விஜய் ரூபானி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT