இந்தியா

இந்திய கடற்படையில் முதன்முறையாக கடல்சார் உளவுப் பணியில் 3 பெண் விமானிகள்

23rd Oct 2020 08:45 AM

ADVERTISEMENT

 

கொச்சி:  இந்திய கடற்படையில் கடல்சார் உளவுப் பணிக்காக டார்னியர் விமானத்தை இயக்கும் வகையில் 3 பெண் விமானிகள் அடங்கிய முதல் குழு தயாராகியுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியது:  இந்திய கடற்படையில் புதிய அத்தியாயத்தை எழுதும் விதமாக, கடல்சார் கண்காணிப்புப் பணிக்காக டார்னியர் விமானத்தில் பெண் விமானிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி,  6 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கொச்சியில் உள்ள கடற்படைத் தளமான ஐஎன்எஸ் கருடாவில் பயிற்சியளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில், அவர்களில் லெப்டினன்ட் பதவியில் உள்ள திவ்யா சர்மா, சுபாங்கி ஸ்வரூப், சிவாங்கி ஆகிய 3 பேர் அடங்கிய முதல் குழு இப்போது தயார் நிலையில் உள்ளது. 

ADVERTISEMENT

முன்னதாக, அவர்களுக்கு விமானப் படை, கடற்படை தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டது. இவர்களில், சிவாங்கி 2019 டிசம்பர் 2-ஆம் தேதியும், 15 நாள்களுக்குப் பிறகு திவ்யா சர்மா, சுபாங்கி ஸ்வரூப் ஆகியோரும் கடற்படை விமானிகளாகத் தகுதி பெற்றனர். பின்னர், அவர்கள் ஒரு குழுவாக உருவாக்கப்பட்டு, 6 பெண் விமானிகள் கொண்ட குழுவின் அங்கமாக சேர்க்கப்பட்டனர். இது, 2-ஆம் கட்ட மற்றும் மிக முக்கியமான பயிற்சியாகும். இது, ஒரு மாத தரைப் பயிற்சி, ஐஎன்ஏஎஸ் 550 டார்னியர் படைப் பிரிவில் 8 மாதப் பறக்கும் பயிற்சி போன்றவற்றை உள்ளடக்கியது.

இந்நிலையில், கொச்சியில் உள்ள கடற்படைத்தளமான ஐஎன்எஸ் கருடாவில் வழியனுப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில், முக்கிய விருந்தினராக தலைமைப் பணியாளர் அதிகாரி (பயிற்சி) ஆண்டனி ஜார்ஜ் பங்கேற்று, டார்னியர் விமானத்தை இயக்க முழுத் தகுதி பெற்ற 3 பெண் விமானிகளுக்கும் விருதுகளை வழங்கினார்.

               

Tags : 3 female pilots Indian Navy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT