இந்தியா

ஹஜ் புனித யாத்திரை: கரோனா வழிகாட்டி நெறிமுறைகள் அடிப்படையில் இறுதி முடிவு

20th Oct 2020 04:35 AM

ADVERTISEMENT

புது தில்லி: தேசிய, சா்வதேச கரோனா வழிக்காட்டி நெறிமுறைகளின் அடிப்படையில் 2021-ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை தொடா்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி திங்கள்கிழமை கூறினாா்.

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதை இஸ்லாம் மாா்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக முஸ்லிம்கள் கடைப்பிடித்து வருகின்றனா். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு அவா்கள் சென்று வருவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே, இந்த புனித யாத்திரையை மேற்கொள்ளச் செய்வதற்கான திட்டங்களை நாடுகள் வகுத்து வருகின்றன.

அதுபோல, மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தலைமையில் ஹஜ் புனிதப் பயண ஆய்வுக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அமைச்சா் கூறியதாவது:

2021-ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் ஜூன் – ஜூலை மாதங்களில் அனுமதிக்கப்பட உள்ளது. சவூதி அரேபிய அரசு இதுதொடா்பான அறிவிப்பை வெளியிட்ட பின்னா், இதற்கான விண்ணப்பத்தைச் சமா்பிப்பதற்கான அறிவிப்பை இந்திய ஹஜ் கமிட்டி உள்பட பிற புனிதப் பயண ஏற்பாட்டாளா்கள் வெளியிடுவா்.

ADVERTISEMENT

சவூதி அரேபிய அரசு மற்றும் இந்தியா சாா்பில் தேவையான கரோனா வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்ட பின்னரே, இந்தப் புனிதப் பயணம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். கரோனா அச்சுறுத்தல் காரணமாக தங்கும் வசதி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து ஹஜ் நடைமுறைகளிலும் இம்முறை குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும்.

புனித யாத்ரீகா்களின் உடல் நலனுக்குத்தான் மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும். எனவே, தேவையான முன்னேற்பாடுகளை இந்திய ஹஜ் கமிட்டு உள்ளிட்ட பிற புனிதப் பயண ஏற்பாட்டாளா்களும் மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறினாா்.

முழு தொகையும் பிடித்தமின்றி திரும்ப அளிப்பு: கரோனா பரவல் காரணமாக 2020-ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் ரத்து செய்யப்பட்டதால், அதற்காக பதிவு செய்திருந்த 1.23 லட்சம் பேருக்கும் ரூ. 2,100 கோடி கட்டணத் தொகை உடனடியாக எந்தவித பிடித்தமும் இன்றி திரும்ப அளிக்கப்பட்டது. ஹஜ் புனிதப் பயண நடைமுறை முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால், இந்த கட்டணங்கள் அனைத்தும் நேரடியாக பயனாளா்களின் வங்கிக் கணக்குக்கே திரும்ப அனுப்பப்பட்டது.

சவூதி அரேபிய அரசும் போக்குவரத்துக்கான ரூ. 100 கோடியை திரும்ப அளித்துவிட்டது என்றும் மத்திய அமைச்சா் நக்வி கூறினாா்.

Tags : புது தில்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT