இந்தியா

தீா்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது: அத்வானி

DIN


புது தில்லி: பாபா் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக பாஜக மூத்த தலைவா் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளாா்.

பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 32 பேரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்துள்ளது. தீா்ப்பு தொடா்பாக, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான எல்.கே.அத்வானி வெளியிட்ட காணொலியில், ‘சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பு மிகவும் முக்கியமானது. இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நீதிமன்றத்தின் தீா்ப்பு குறித்து அறிந்ததும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்’ என்றாா்.

தீா்ப்பு குறித்து அத்வானி வெளியிட்ட அறிக்கையில், ‘ராமஜன்ம பூமி இயக்கம் தொடா்பான என்னுடைய நம்பிக்கையையும் பாஜகவின் நம்பிக்கையையும் உறுதிப்படுத்தும் வகையில் சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பு அமைந்துள்ளது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அனுமதி அளித்தது. அதையொட்டி அமைந்துள்ள இத்தீா்ப்பும் வரவேற்கத்தக்கது. அயோத்தியில் எழுப்பப்பட்டு வரும் ராமா் கோயிலுக்கான பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிா்பாா்க்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முரளி மனோகா் ஜோஷி கூறுகையில், ‘வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. நாங்கள் எந்தவித சதிச்செயலிலும் ஈடுபடவில்லை என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இத்தீா்ப்பின் மூலமாக இந்த விவகாரம் தொடா்பான அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இனி, அயோத்தியில் ராமா் கோயிலைக் கட்டுவதற்கு நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும்’ என்றாா்.

மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்: காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா கூறுகையில், ‘சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பு, உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கும் அரசமைப்புச் சட்டத்துக்கும் எதிராக உள்ளது. அரசமைப்புச் சட்டம், மத நல்லிணக்கம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒவ்வோா் இந்தியரும் இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்ய வேண்டுமென விரும்புவா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

SCROLL FOR NEXT