இந்தியா

கரோனா பரிசோதனையைத் தவிர்க்க மகாராஷ்டிரம் செல்வோர் செய்யும் தந்திரம்

30th Nov 2020 02:46 PM

ADVERTISEMENT


மெங்களூரு: கரோனா தொற்றின் இரண்டாவது அலை வீசக் கூடும் என்ற அச்சத்தால், அதிக தொற்று பாதிப்பு இருக்கும் மாநிலங்களிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனையை மகாராஷ்டிர அரசு கட்டாயமாக்கியுள்ளது.

கரோனா தொற்று அதிகம் பாதித்துவரும் தில்லி, ராஜஸ்தான், குஜராத், கோவாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மகாராஷ்டிரத்துக்குள் வரும்போது, கரோனா தொற்று பாதிப்பில்லை என்பதை உறுதி செய்ய கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இது கட்டாயமும் கூட.

இப்பகுதிகளிலிருந்து வருவோருக்கு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மாநில எல்லைப் பகுதிகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதிலிருந்து தப்பிக்க, கோவாவிலிருந்து மகாராஷ்டிரம் வரும் பெரும்பாலானோர், சாலை வழியாக பெலகாவி, ஹூபள்ளி, மங்களூரு போன்ற நகரங்களுக்கு வந்துவிட்டு, அங்கிருந்து மும்பை உள்பட மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விமானம் மூலம் செல்கிறார்கள்.

ADVERTISEMENT

பஞ்ஜிமிலிருந்து நேரடியாக மகாராஷ்டிரம் வந்தால், நிச்சயமாக பயண விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஆனால், கர்நாடகத்திலிருந்து வந்தால், அந்த விதிமுறைகள் பொருந்தாது.

ஹூபள்ளி விமான நிலைய இயக்குநர் பிரமோத் குமார் கூறுகையில், பயணிகளின் பயண விவரங்களை நாங்கள் கேட்பதிப்பதில்லை, அதே வேளையில், சமீபகாலத்தில் இங்கிருந்து மகாராஷ்டிரம் செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றார்.

கடந்த சில நாள்களாக மகாராஷ்டிரம் செல்லும் அனைத்து விமானங்களும் முழுதாக நிரம்பிவிடுவதாகவும் தனியார்  விமானப் போக்குவரத்து சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், பழைய கோவாவிலிருந்து மெங்களூரு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் மும்பை சென்றடைந்தனர்.

நாங்கள் கோவா செல்லவே திட்டமிட்டோம். எங்கள் சுற்றுலாத் திட்டத்தில் உடுப்பியோ, மங்களூருவோ இல்லை. ஆனால், கோவாவிலிருந்து நேரடியாக மகாராஷ்டிரம் சென்றால் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதால், திட்டத்தை மாற்றி, கர்நாடகம் சென்று, மங்களூருவிலிருந்து விமானம் ஏறினோம் என்கிறார்கள்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT